கோவை: “கரூர் வழக்கை இங்கே விசாரித்து இருந்தால் இவ்வளவு சிரமமும் சங்கடமும் ஏற்பட்டு இருக்காது. டெல்லிக்கு விஜய்யை வரவழைத்து அரசியல் ஒப்பந்தமும், தேர்தல் ஒப்பந்தமும் போடுவதற்கு முயற்சி செய்யலாமா என பாஜக பார்த்துக்கொண்டு இருக்கிறது” என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜன.12) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நீலகிரி மாவட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிறார். ராகுல் காந்தியுடன் தனியார் பள்ளி விழாவிலும், சமத்துவப் பொங்கல் விழாவிலும் கலந்து கொள்ளவுள்ளோம்.
கூடலூரில் ராகுல் காந்தி கலந்துகொள்வது முழுக்க முழுக்க பள்ளி நிகழ்ச்சி. இதில் அரசியல் கலப்பு இல்லை. பள்ளி விழாவிலும், பொங்கல் விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை இங்கே விசாரித்து இருந்தால் இவ்வளவு சிரமமும் சங்கடமும் ஏற்பட்டு இருக்காது. டெல்லிக்கு வரவழைத்து அரசியல் ஒப்பந்தமும், தேர்தல் ஒப்பந்தமும் போடுவதற்கு முயற்சி செய்யலாமா என பாஜக பார்த்துக்கொண்டு இருக்கிறது. அவர்களின் முயற்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை. ஒப்பந்தத்துக்கு தயாரானால் வழக்குகள் மாயமாகிவிடும், மறைந்துவிடும்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார். மகாராஷ்டிரா பற்றி, மும்பையைப் பற்றி பேசுவார். ஆனால், தமிழகத்தைப் பற்றி அறிவுபூர்வமாக, நாகரிகமாக பேச மாட்டார்.
இந்தியா கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் எங்கெல்லாம் ஆட்சி செய்கின்றதோ, அங்கு காங்கிரஸுக்கும் பொறுப்புண்டு. அதை காங்கிரஸ் ஆட்சியாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கின்றது. அது தொடர்பாக எங்கள் தலைமையும், தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் தலைமையும் சேர்ந்துதான் முடிவு எடுப்பார்கள். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. எஃகு கோட்டையாக இருக்கிறது. இது கொள்கை அடிப்படையில் உருவான கூட்டணி.
மதவாதிகளை தமிழ் மண்ணில் ஊடுருவர் கூடாது என்பதற்காகவும், தமிழக மக்களை காக்கவும் உருவானது இந்தியா கூட்டணி. எங்கள் தலைமை வேறு யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸுக்கு கொள்ளைப்புற அரசியல் செய்யும் பழக்கம் கிடையாது. நேரடியாக அரசியல் செய்வோம்.
அகில இந்திய தலைமை, திமுகவுடன் பேச குழு அமைத்திருக்கிறது. வேறு யாருடனும் பேச சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொது வெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என பலமுறை சொல்லி இருக்கிறேன். கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கின்ற மாதிரி கருத்துகளை இனிமேல் பேச மாட்டார்கள்” என்று செல்வப்பெருந்தகை கூறினார்.