

புதுடெல்லி: மக்கள் மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் நீங்கள் பேச்சை நிறுத்தவில்லை?, எந்த உடனடி நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்? கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் எழுப்பி உள்ளனர். இந்த விசாரணை மாலை 7.00 மணி வரைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விசாரணையின் முக்கிய நடவடிக்கையாக, தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப முடிவு செய்த சிபிஐ, அவரை இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் இன்று காலை டெல்லி சென்றார். பின்னர், சிபிஐ தலைமையகத்துக்குச் சென்று விசாரணையில் நேரில் ஆஜரானார்.
இந்த விசாரணையின்போது மூன்று முக்கிய கேள்விகளை சிபிஐ, விஜய்யிடம் எழுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கேள்விகள் கடுமையானவை மற்றும் முக்கியமானவை என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
முதல் கேள்வியான, ‘நீங்கள் ஒரு திறந்த வாகனத்தில் நின்று கொண்டிருந்தீர்கள், கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுவது தெளிவாகத் தெரிந்தும், நீங்கள் உங்கள் பேச்சைத் தொடர்ந்தது ஏன்?’ எனக் கேட்கப்பட்டது.
இரண்டாவது கேள்வியில், ‘சிலர் மயங்கி விழுந்தபோது, நீங்கள் கூட்டத்திற்குத் தண்ணீர் பாட்டில்களை விநியோகித்துக் கொண்டிருந்தீர்கள், அப்படியிருந்தும் இந்த விஷயத்தில் ஏன் எந்த உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை?’ எனக் கேட்டனர்.
மூன்றாவது மற்றும் மிக முக்கியமான கேள்வியாக, ‘நீங்கள் ஏன் சரியான நேரத்தில் கூட்ட இடத்திற்கு வரவில்லை? உங்கள் தாமதம் கூட்டத்தில் அமைதியின்மையையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தியது. இது உங்கள் அரசியல் அதிகாரத்தைக் காட்டும் செயலா?’ என கேட்கப்பட்டது.
கரூர் பேரணியின் ஏற்பாடுகள், திட்டமிடல், காவல்துறையுடனான ஒப்பந்தங்கள், கூட்டக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
பேரணியை ஏற்பாடு செய்தல் மற்றும் நிர்வகிப்பதில் ஏற்பட்டதாகக் கூறப்படும் அலட்சியம் குறித்தும் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துகிறது. முக்கியமாக, தவெக பேரணிக்கு முன்பு கட்சித் தலைவர்களுடன் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை மற்றும் அந்தக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி சிபிஐ அறிய விரும்புகிறது.
கரூர் நிகழ்வின் போது என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன? என்ன குறைபாடுகள் ஏற்பட்டன? என்பதை கண்டறிய சிபிஐ முயற்சிக்கிறது. பேரணியின் போது காவல்துறைக்கும் கட்சிக்கும் இடையே பேசப்பட்ட ஏற்பாடுகளும் சிபிஐயின் முக்கிய அம்சமாக உள்ளது. கூட்டக் கட்டுப்பாடு ஏன் முறையாகப் பின்பற்றப்படவில்லை? என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வளவு பெரிய கூட்டத்திற்குத் தண்ணீர், பாதுகாப்பு மற்றும் அவசரகால மேலாண்மைக்கான ஏற்பாடுகள் போதுமான அளவில் ஏன் செய்யப்படவில்லை என்பது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்துகிறது.
மேலும், பேரணியின் செலவுகள், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய சிபிஐ திட்டமிட்டுள்ளது.
டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விஜய்யிடம் இரவு 7 மணி வரை விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.