செல்வப்பெருந்தகை
“காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்ததுபோல எங்களுக்கும் வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்பது நியாயம் இல்லை” என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்பார்க்கின்றன. ஆனால் கூட்டணிக்கு புதிதாக கட்சிகள் வந்திருப்பதால் திமுக தர மறுக்கிறது. இதனால் தொகுதி ஒப்பந்தம் இன்னும் இறுதியாகாத சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், “காங்கிரசுக்கும் திமுகவுக்கும் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் போது இடது சாரி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் தரமுடியாது என்று சொல்வதில் எந்த ஒரு நியாயமும் இல்லை” என்றார்.
இதற்கு நேற்று பதிலளித்த செல்வப்பெருந்தகை, “நாங்கள் ஒரு தேசிய கட்சி. திமுக எங்களுக்கு 110, 63, 41, 25 என தொடர்ச்சியாக தொகுதிகளை குறைத்தது. எனவே இந்தமுறை 41 தொகுதிகள் வேண்டும் என எங்களது தலைமை கேட்டது. ஆனால் அதையும் குறைத்துதான் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மூன்று தொகுதிகள் அதிகமாக கொடுத்ததை மனநிறைவோடு வாங்கியிருக்கிறோம்.
இப்படியான சூழலில் காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்ததுபோல எங்களுக்கும் வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்பது நியாயம் இல்லை.
உங்களுடைய உரிமையை கேளுங்கள். முதல்வருக்கு மனம் இருக்கிறது; இருந்தால் கொடுப்பார். எங்களுடைய வேதனையை தோழமை கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.