மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. | படம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி |
மதுரை: டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரத்தில் எதிர்குரல் கொடுக்காமல், கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு தாலி கட்டிய மனைவி போல் ஆகிவிட்டன என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
‘விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற தலைப்பில், அதிமுக சார்பில் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இது தொடர்பான செயலி மூலம் வீடுகள்தோறும் கணக்கெடுக்கும் பணியை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மினி கிளினிக், மடிக்கணினி திட்டம் உள்ளிட்டவற்றை திமுக நிறுத்தி விட்டது தொடர்பாக, புதிதாக தொடங்கப்பட்டுள்ள செயலி மூலம் மக்களிடம் நேரடியாகச் சென்று சர்வே எடுக்கவுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் எனக் கூறிவிட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்ததுதான் சாதனையாக உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து போன்ற நடவடிக்கைகளுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்காமல், தாலி கட்டிய மனைவி போல் ஆகிவிட்டன. காங்கிரஸ் எதிர்த்து குரல் கொடுக்கிறது.
திருமாவளவனுக்கு தனது கட்சியை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பேசாமல் உள்ளார். நாட்டிலேயே தமிழகத்தில் தான் தலித்துகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு, தமிழகத்தில் இருந்து எந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் குரல் கொடுக்கவில்லை. விலைவாசி உயர்வு இல்லை, சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது, போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத நல்லாட்சி கொடுக்கிறேன் என நடிகர் வடிவேலு போல் திமுகவினர் முதல்வரை புலம்ப வைத்துள்ளனர். திமுக நல்லாட்சி கொடுக்கிறது என்பதை மக்கள்தான் கூற வேண்டும் என்று கூறினார்.