செல்லூர் ராஜூ
மதுரை: “2011-ம் ஆண்டு மக்கள் தொகையை குறிப்பிட்டு திட்ட அறிக்கையை தவறாக தயார் செய்ததே மெட்ரோ ரயில் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு முக்கியக் காரணம்” என்று திமுக அரசு மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு தூய்மையான குடிநீர் குடிக்கவும், தாராளமாக வீட்டு உபயோகத்துக்கு தண்ணீரை பயன்படுத்தவும் அதிமுக ஆட்சியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதுபோல், மாரியம்மன் தெப்பக்குளத்தை தூர்வாரி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து 40 ஆண்டுக்குப் பிறகு நிரப்பினோம்.
வைகை ஆற்றில் இரண்டு தடுப்பணைகளை கட்டி நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கினோம். திருமலை நாயக்கர் மகாலை, புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்தது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை கொண்டு வந்தோம்.
பொதுவாக ஒரு திட்டத்துக்கு திட்ட அறிக்கை அனுப்பும்போது அதை அரசுகள் பல விளக்கங்கள், திருத்தங்கள் கேட்டு திருப்பி அனுப்புவது வழக்கமான நடைமுறைதான். ஆனால், ஏதோ கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்விட்டது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி திமுக தேர்தல் ஆதாரம் அடைய பார்க்கிறார்கள்.
ஒரு மெட்ரோ திட்டத்துக்கு எதற்கு உங்களால் ஒரு சரியான புள்ளி விவரங்களை பெற்று திட்ட அறிக்கை தயார் செய்ய முடியவில்லை.
2011-ம் ஆண்டில் குறிப்பிடப்பட்ட மக்கள் தொகையையும் தவறான வழித்தடங்களையும் மெட்ரோ ரயில் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். தற்போது உள்ள மக்கள் தொகையை அவர்கள் குறிப்பிட்டு இருக்க வேண்டும். இவர்கள் தங்கள் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை செய்துவிட்டு, காயமும் இருக்கக் கூடாது, கல் எரிந்தது மாதிரி இருக்க வேண்டும் என்பதுபோல் மதுரை, கோவை மக்களை திமுக ஏமாற்றிவிட்டது.
அன்டை மாநிலமான கேரளா சரியான திட்ட அறிக்கையை தயார் செய்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வாங்கி விட்டனர்.
கலைஞர் நூலகத்தை வேகமாக கட்டி திறந்துவிட்டனர். ஆனால், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் திமுக அக்கறை காட்டுவதில்லை. அதிமுக ஆட்சியில்தான் மெட்ரோ ரயில் திட்டம் வரும். முதல்வர் வந்து மதுரையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
மேலமடை திட்டம் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதுபோன்ற அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் முதல்வர் திறந்து வைக்கிறார். இவர்கள் இந்த ஆட்சியில் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. மதுரை இந்த ஆட்சியில் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.