‘‘வேட்டி எங்களுக்கு கொள்கை போன்றது. கூட்டணி என்பது துண்டைப் போன்றது. துண்டை எப்போது வேண்டுமானாலும் எடுப்போம். வேட்டியை விடமாட்டோம் ’’என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்று முடிந்த திட்டப்பணிகளைத் தொடங்கி வைக்கவும், பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்காகவும் தமிழக முதல்வர் மதுரை வருகிறார். செல்லூரில் எனது வீட்டின் முன்பே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவதால் மக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள். இன்று மதுரை மாநகர் பகுதிக்குள் வரும் முதல்வர் வந்து பார்வையிட்டால்தான், சாலைகள் எவ்வாறு உள்ளது என்பது அவருக்கு தெரியும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக பொறுப்பேற்றபோது மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு, 2 மாதத்தில் நிலம் கையகப்படுத்தி, அதற்கான பணிகளை தொடங்குவோம் என கூறியிருந்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக தொடங்கப்பட்ட மதுரை விமான நிலையத்தில் இதுவரை எந்த விரிவாக்கப் பணியும் நடக்கவில்லை. மதுரைக்குப் பின்னர் தொடங்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையம் உலகத்தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் என்ற தனிமனிதர் வெளியே செல்வதால் எந்தவொரு பாதிப்பும் கட்சிக்கு இல்லை. ஆலமரத்தில் இருந்து பழுத்த இலை கீழே விழுவதால் அந்த ஆலமரம் சாய்ந்து விட்டது என அர்த்தம் இல்லை. அவர் அதிமுகவின் இரட்டைஇலை சின்னத்தில் நின்றதால்தான் மக்கள் அவருக்கு ஓட்டு போட்டார்கள்.
சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே தவிர புதிதாக வருபவர்களை மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். கொள்கை எங்களுக்கு வேட்டி போன்றது. கூட்டணி என்பது துண்டு போன்றது. துண்டை எப்போது வேண்டுமானாலும் எடுப்பாம். வேட்டியை விட மாட்டோம்.
திருப்பரங்குன்றம் தூணில் விளக்கேற்றினால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இஸ்லாமிய அமைப்பினரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நீதியரசரர் உத்தரவு வழங்கிய பின்னரும் திமுக அரசு ஒரு மதப் பிரச்சினையாக கொண்டு செல்வதாக தெரிகிறது. ரூ.301 கோடி தென்னக ரயில்வேக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு எவ்வளவு ஒருக்கீடு செய்யப்பட்டுள்ளது? சு.வெங்கடேசன் எம்.பி. மதுரைக்கு புதிதாக ஒரு ரயிலாவது கொண்டு வந்துள்ளாரா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.