தமிழகம்

“டோர் டெலிவரி மூலம் கஞ்சா” - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி முதலமைச்சராகவும், புத்தாண்டை முன்னிட்டும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழிபாடு நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் திமுகவிற்கு 69 கவுன்சிலர்கள் உள்ளனர். நாங்கள்தான் வீரன் என்று இங்குள்ள இரண்டு அமைச்சர்கள் பேசுகிறார்கள்.

ஆனால், 69 கவுன்சிலர்களில் ஒருவரை கூட அவர்களால் மேயர், மண்டலத்தலைவர்கள், நிலைக்குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்க முடியவில்லை. யாரையும் கட்டுப்படுத்துகிற இடத்தில் திமுக தலைமையும் இல்லை. திமுக கவுன்சிலர்கள் யாரும் சரியில்லையென்றால், இப்பதவிக்கு வர தகுதியில்லையென்றால் அவர்களை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய சொல்ல வேண்டியதுதானே?

இந்த ஆட்சி 23-ம் புலிகேசி ஆட்சியைப்போல்தான் உள்ளது. போதை பயன்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் ஐந்து வயது பாப்பா முதல் 88 வயது பாட்டி வரைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கஞ்சா, போதைப்பொருள் பயன்பாடு இல்லவே இல்லை என்று அருமையான ஜோக் அடித்துள்ளார்.

இப்போது இந்த ஆட்சியில் போதை ஆசாமிகளும் போதைப்பொருட்களை விற்க வலைதளத்திற்கு போய்விட்டார்கள். கஞ்சா விற்கிறவர்கள் கூட, டோர் டெலிவரி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். எதில் டெக்னாலஜி முன்னேற வேண்டும் என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.

போலீஸ் சீரூடையில் இருப்பவரையே கத்தியை வைத்து மிரட்டும் அளவிற்கு ரவுடிகள், வளர்ந்துவிட்டனர். வடமாநில இளைஞரை வெட்டுகிறார்கள். காங்கிரஸ்தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது. ஆனால், இந்த காங்கிரஸ்காரர்கள் அல்ல, பழைய காங்கிரஸ்காரர்கள். அதிமுக கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் பயன்பெற்று வந்த பல நல்ல திட்டங்களை திமுகவினர் மூடுவிழா நடத்திவிட்டார்கள்.

கூட்டணி தொடர்பாக யார் எதை சொன்னாலும் நம்பாதீர்கள். நிறைய பேர் கூட்டணி பற்றி வதந்தி பேசுவார்கள். நடிகர் என்றால் ரசிகர்கள் எல்லோருக்கும் வருவார்கள். சினிமா கவர்ச்சிக்கு தமிழகத்தில் கூட்டம் கூடத்தான் செய்யும். மக்கள்தான் முடிவு செய்கிற இடத்தில் இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT