இணைப்பு பாலப்பணி நிறைவுபெறாததால் கோரிப்பாளையம் மேம்பாலத்தில் அதற்கான வழிப்பாதை மூடி வைக்கப்பட்டுள்ளது. | படங்கள்: நா.தங்கரத்தினம் |

 
தமிழகம்

மதுரை: அரைகுறையாக அந்தரத்தில் நிற்கும் செல்லூர் இணைப்பு பாலம்?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை கோரிப்பாளையம் மேம்பாலத்தில் செல்லூர் இணைப்பு பாலம் அரைகுறை பணிகளுடன் அந்தரத்தில் நிற்பதால், முதல்வர் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்தும் கோரிப்பாளையம், வைகை வடகரை சாலை, பந்தல்குடி சாலை, செல்லூர் சாலைகளில் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தமுக்கத்தில் இருந்து நெல்பேட்டை அண்ணா சிலை வரை மேம்பாலமும், கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இடதுபுறமாக மேம்பாலத்திலேயே திரும்பி செல்லூர் 100 அடி சாலைக்கு செல்வதற்கு ஒரு இணைப்பு பாலமும் அமைக்க திட்டமிடப்பட்டது.

          

இவற்றில் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை ரூ.213 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப். 21-ல் திறந்து வைத்தார்.

இந்த மேம்பாலத்தை, சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக திமுக ஆட்சியிலேயே திறந்துவிட வேண்டும் என்பதற்காக கடைசி ஒரு மாதத்தில் இரவு, பகலாக பணிகள் அவசரம் அவசரமாக நடந்தன.

இதனால் தமுக்கம்-நெல்பேட்டை அண்ணா சிலை வரை முடிக்கப்பட்ட மேம்பாலத்தை மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால், இந்த பாலத்துடன் திட்டமிடப்பட்ட செல்லூர் 100 அடி சாலை இணைப்பு பாலம், அரைகுறை யாக பாதியிலேயே நிற்கிறது.

தற்போது தமுக்கம்-நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான மேம்பாலப் பகுதியில் மட்டும் போக்குவரத்து நடைபெறுகிறது. செல்லூர் பிரிவு பாலம் எப்போது முழுமையாக கட்டி முடிக்கப்படும் என தெரியவில்லை.

அதனால், தற்போது வரை யானைக்கல் பாலம், செல்லூர் பாலம் ஸ்டேஷன் சாலை வழியாக இருந்து வரும் வாகனங்கள், கோரிப்பாளையம், தமுக்கம் வழியாக அழகர் கோவில் சாலையில் வரமுடியாமல் இன்னமும் செல்லூர் பந்தல்குடி கால்வாய் வழியாகவே கடும் போக்கு வரத்து நெரிசலுக்கு மத்தியில் செல்கின்றன.

அதேபோல், தமுக்கத்தில் இருந்து செல்லூர் சாலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள் இணைப்பு பாலம் இல்லாததால் மேம்பாலத்தின் அடிப்பகுதி வழியாக தேவர் சிலையை கடந்து ஆழ்வார்புரம் வைகை வடகரை சாலை வழியாக செல்லூர் சாலைக்கு செல்ல வேண்டிய வேண்டிய நிலை உள்ளது.

அதனால், கோரிப்பாளையம் மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தும், கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், தமுக்கம்-நெல் பேட்டை அண்ணா சிலை வரையிலான மேம்பாலத்தை திறந்து வைத்ததோடு தங்கள் பணி நிறைவுபெற்றதாகவும், செல்லூர் இணைப்பு பாலம் பணிகளை விரைவுப்படுத்தி முடிக்காமல் மெத்தனம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சித்திரைத் திருவிழாவுக்கு முன்பாகவாவது செல்லூர் பால இணைப்பு பணிகளை நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT