சென்னை: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் முதல் நாளிலேயே வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அன்றைய தினமே அமலுக்கு வந்தன. தலா 2,106 தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுக்கள் 24 மணிநேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக, அதிமுக கூட்டணிகள் மற்றும் தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேற்றுவேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதுதொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மனுத் தாக்கலையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தடுப்பு அமைத்து, வேட்பாளர்களின் 3 வாகனங்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டன.
அலுவலகத்தைச் சுற்றி அனைத்து பகுதிகளும் முழுமையாக சிசிடிவி கேமரா கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் கூட்டமாக வருவதை தடுக்க பல அடுக்கு தடுப்புகளும், போலீஸ் பாதுகாப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, மும்மதத்தினர் முன்னிலையில் கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். பனையூரில் உள்ள வீட்டில் அவர் புறப்பட்டது முதல் மனுத்தாக்கல் செய்யும் அலுவலகம் வரை வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். மனுத் தாக்கல் செய்த பிறகு, பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளில் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தாய் அன்னம்மாள், மனைவி கயல்விழி ஆகியோருடன் வந்து காரைக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கல் மாலை 3 மணிவரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் நாதக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை அண்ணா நகர் உள்ளிட்ட சில தொகுதிகளில் ஒருவர்கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோக்மனுத் தாக்கல் செய்தார்.
560 மனுக்கள் தாக்கல்: மனுத் தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் வேட்பாளர் உட்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 560-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுத் தாக்கல் செய்து முடித்ததும், வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இன்று மகாவீர் ஜெயந்தி, நாளை (ஏப்.1) வங்கிகளுக்கு விடுமுறை காரணமாக 2 நாட்கள் மனு தாக்கல் நடைபெறாது. அடுத்து, ஏப்.2-ம் தேதி மனுத் தாக்கல் நடைபெறும். 3-ம் தேதி புனித வெள்ளி, 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் மனுத்தாக்கல் நடைபெறாது. 4, 6-ம் தேதிகள் மட்டுமே அவகாசம் இருப்பதால் அந்த 2 நாட்களும் மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும். 6-ம் தேதியுடன் மனுத் தாக்கல் முடிகிறது.
7-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்பப்பெற 9-ம் தேதி கடைசி நாள். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் அன்று மாலையே ஒதுக்கப்படும்.
வேட்புமனுவை வேட்பாளர்கள் இணையவழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்யலாம். ஆனால் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அச்சிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பிரச்சாரம்,வாகன அனுமதி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான அனைத்து அனுமதிகளையும் சுவிதா இணையதளம் அல்லது செயலி வழியாகவே விண்ணப்பித்து பெற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை https://affidavit.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.