காரைக்குடி அமராவதி புதூரில் பிரச்சாரம் செய்த சீமான்.
காரைக்குடி: தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி வர வேண்டாம் என்றால் எங்களுக்கு வாக்களியுங்கள். நாதக வெற்றியை எதிரிகளால் தள்ளிப்போட முடியும், தடுக்க முடியாது என காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதிபுதூர், தேவகோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் நேற்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: வீடுகளை வாடகைக்கு பிடித்துக் கொடுப்பவர் வீட்டு புரோக்கர். அதேபோல, வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை கொண்டு வருபவர் நாட்டு புரோக்கர். 400 ஆண்டுகளுக்கு முன்பு, வணிகம் செய்ய வந்து நாட்டைப் பிடித்துக் கொண்டவர்களை மிகவும் சிரமப்பட்டு, உயிர்த் தியாகங்கள் செய்து விரட்டி அடித்தோம். அவர்களை மீண்டும் வா, வா என்று அழைக்கின்றனர். உழைப்பை சுரண்டி லாபத்தை எடுத்துச் செல்லத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் வருகின்றன. நாடு பொருளாதார விடுதலை அடையவில்லை என்றால், அது சுதந்திர நாடு அல்ல, அடிமை நாடு.
தனியார்மயம் மற்றும் உலகமயப் பொருளாதாரத்தை கைவிட்டு, தற்சார்பு, பசுமை பொருளாதாரத்தை கட்டமைக்க திட்டமிட்டுள்ளேன். சேவை எல்லாம் தனியாரிடம் உள்ளது. அதை அரசிடம் கொண்டு வருவேன். அரசியல், கல்வி எல்லாமே வியாபாரமாகி விட்டது. காசு கொடுத்தவர்கள் கருத்துக் கணிப்பில் முந்துகின்றனர். நான் காசு கொடுப்பதில்லை, அதனால் எப்போதும் பின்தங்கியே இருப்பேன். தேர்தல் முடிவு வந்ததும் நான் முந்துவேன்.
நான் யாருக்கும் ரூ.1,000 கொடுக்க மாட்டேன், உள்ளூரிலேயே ரூ.5,000 வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்வேன். மற்ற அரசியல்வாதிகள் மக்களை வாக்கு என்று பார்க்கின்றனர், நான் உயிராக பார்க்கிறேன். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி வர வேண்டாம் என்றால் எங்களுக்கு வாக்களியுங்கள். ஆளும் கட்சிகளின் பொருளாதாரம் சாராயம். எங்களது பொருளாதாரம் பால். நீங்கள் உழைக்கும் பணத்தை, உழைப்பே இல்லாமல் ஜிஎஸ்டி என்ற பெயரில் அடவடியாக பறித்து வருகிறது மத்திய அரசு.
நாம் நடத்துவது கட்சி அல்ல, மக்களுக்கான மாற்றத்துக்கான புரட்சி. 36 லட்சம் வாக்குகளை நாம் 1 கோடியே 36 லட்சம் வாக்குகளாக மாற்ற முடியும். கோடிகளை கொடுக்காமல் கொள்கையை சொல்லி வாக்கு பெற முடியும். வாக்குக்கு அனைவரும் காசு, இலவசம் கொடுக்கின்றனர். ஏனென்றால் அவர்களிடம் நம்பிக்கை இல்லை.
நம்பிக்கை இல்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது. நாம் மானமுள்ள தமிழன் என்று காட்ட வேண்டும். வறுமையும், தோல்வியும் கற்றுக் கொடுக்காததை, எந்த பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்காது. நமது வெற்றியை எதிரிகளால் தள்ளிப் போட முடியும், தடுக்க முடியாது. இவ்வாறு பேசினார்.