தமிழகம்

“களத்துக்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவை!” - விஜய்யை விமர்சித்த சீமான்

செய்திப்பிரிவு

“களத்தில் இருப்பவர்களைப் பற்றி பேசுவோம் என ஈரோட்டில் பேசிய விஜய், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் ஏன் போட்டியிடவில்லை? களத்துக்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்புத் தீவிரத் திருத்தம் என்று சொல்லி 1 கோடி வாக்காளர்களை நீக்கி உள்ளனர். பிழையைத் திருத்தாமல், மொத்தமாக அடித்துவிட்டு எழுதியதை எப்படி ஏற்க முடியும்? அடுத்த 2 மாதங்களில், விடுபட்டவர்களை எப்படிச் சேர்க்க முடியும்? நாட்டு மக்களின் கடைசி மதிப்பு மிக்க உரிமையே இந்த வாக்கு தான். அதைக் காப்பாற்றவே பெரும் போராட்டமாக இருக்கிறது.

அன்றைக்கு வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர். இன்றைக்கு ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்யும் நிலை உள்ளது. இது கொடுமைானது. ‘களத்தில் இருப்பவர்களை பற்றி பேசுவோம்’ என ஈரோட்டில் பேசிய விஜய், விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்களில் ஏன் போட்டியிடவில்லை? களத்துக்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவை.

வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகள் தடை என்று இருந்தால் வாக்குக்கு பணம் கொடுப்பது ஒழிந்துவிடும். 200 தொகுதிகளை வாங்கிவிடுவோம் என்பதைத் தான் 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று உதயநிதி கூறுகிறார். தேர்தல் வரும்போதும் தீயசக்திகள் தூய சக்திகளாகிவிடும்.

விஜய் 2021-ல் தீயசக்திக்கு ஏன் ஓட்டுப் போட்டார்? அண்ணா, எம்ஜிஆர், கொள்கைக்கு ஓட்டுப் போடுவதில்லை. நீங்கள் கொடுக்கும் நோட்டுக்குத் தான் ஓட்டு. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டி ஒருவர் தற்கொலை செய்தது அறிவார்ந்த செயல் கிடையாது. மதங்களைத் தாண்டி மனிதம் தான் புனிதமானது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT