சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சீமான்.

 
தமிழகம்

‘திமுக சொர்ணாக்கா... அதிமுக வர்ணாக்கா’ - நக்கலடித்த சீமான்

செய்திப்பிரிவு

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தாம்பரம் அடுத்த சேலையூரில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர்கள் மற்றும் சமூக ஊடக தொழில் நுட்ப பிரிவு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் தேர்தலில் பொதுமக்களிடம் தங்கள் கொள்கை மற்றும் கோட்பாடுகளை எப்படி சேர்க்கவேண்டும் பிற கட்சிகளின் குறைபாடுகளை சமூக வலைதளங்கள் மூலம் எப்படி எடுத்துரைக்க வேண்டும் என உறுப்பினர்களிடையே சீமான் கலந்துரையாடினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: ஆட்சி மாற்றம் ஏற்படும் என மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பழனிசாமி பேசியிருக்கிறார். ஆட்சி மாற்றம் என்றால் என்ன? என்ன மாற்றம் நிகழப் போகிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், ஊழல் இல்லாமல் இருக்குமா? மண் அள்ளுவது தடுக்கப்படுமா? மதுபான கடைகள் மூடப்படுமா? திமுகவுக்கும் அதிமுகவுக்கும் என்ன வேறுபாடு, காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் என்ன வேறுபாடு? ஒன்றும் இல்லை.

          

ஆளை மாற்றி மாற்றி உட்கார வைப்பார்கள். போன முறை பழனிசாமி, இந்த முறை ஸ்டாலின் அடுத்த முறை மாற்றம் என்றால் யாரை உட்கார வைப்பார்கள்? ஆட்சி மாற்றம் என்பது ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். மற்றபடி திமுக, அதிமுக என மாறி மாறி வருவதால் ஒரு நன்மையும் இல்லை. திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான். திமுக சொர்ணாக்கா என்றால் அதிமுக வர்ணாக்கா.

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் கொடுப்பது ஆட்சி அல்ல, மழை நீரில் சிக்கி தவிக்காமல் மக்களை காப்பாற்றுவது தான் ஆட்சி. ஒரே கொள்கையில் இருக்கும் கட்சியினர் போட்டி போட்டுக்கொள்கிறார்கள். என் கொள்கைக்கு யாரும் உலகத்திலேயே போட்டிக்கு ஆள் இல்லை. என்னுடன் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஏதும் இல்லாததால் தனித்து போட்டியிடுகிறேன். பாஜக உள்ளே வந்துவிடும் என கூறுகிறார்கள். பாஜகவை உள்ளே அழைத்து வந்தது யார்? தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடைய கருணாநிதிதான் காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

பாஜக தனது கட்சியில் 90% இந்துக்கள் இருக்கிறார்கள் என கூறுகிறது. திமுக தனது கட்சியில் 80% இந்துக்கள் இருக்கிறார்கள் என கூறுகிறது. அப்படி என்றால் பாஜகவின் பி டீம் யார்?. திமுகவில் இருக்கும் முதன்மையான அமைச்சர்கள் அனைவரும் இதற்கு முன்பு எங்கிருந்தார்கள். அதிமுகவில் இருந்து வந்தவர்கள் தான். பிறகு எப்படி மாற்றம் ஏற்படும். கூட்டணியில் மாற்றம் என்பது காசுக்காகவும், சீட்டுக்காகவும் நடக்கிறது. கூட்டத்தில் நிற்பதற்கு வீரமும் துணிவும் தேவையில்லை. தமிழன் என்றால் யார் என கேட்கிறார்கள். திராவிடன் என்றால் யார் எனக் கேட்டால் பதில் சொல்வதில்லை.

ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு நான் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறேன் எனது அடுத்த தலைமுறைகள் அதன் பலனை அடைவார்கள். திமுகவின் ஆட்சியை தூக்கி எறிவது தான் மற்ற கட்சிகளின் கொள்கையா? மக்களின் நலன் சார்ந்து ஆட்சியை கொடுக்க வேண்டும். பாஜக உள்ளே வந்துவிடும் என்பது அடிப்படை அறிவற்ற பேச்சு. நான் வரவிடமாட்டேன் என கூறும் அளவிற்கு தைரியம் யாருக்கும் இல்லை. மற்றொரு கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்றால் தனி கட்சி எதற்கு? தனி கோட்பாடுகள் எதற்கு? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT