தமிழகம்

அதிமுக - பாமக கூட்டணி எதிர்பார்த்தது தான்: சீமான் கருத்து

செய்திப்பிரிவு

ஈரோடு: அதிமுக- பாமக கூட்டணி எதிர்பார்த்தது தான், என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக- பாமக கூட்டணி எதிர்பார்த்தது தான். அவர்களுக்கு இது ஒன்றுதான் வாய்ப்பு. அதிமுக கூட்டணியில் இணைவது மட்டுமே வாய்ப்பு உள்ளதால் அன்புமணி இணைந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவோம். தைப்பொங்கலாக இல்லாமல், தேர்தல் பொங்கலாக இருக்க வேண்டும் என்பதற்காக ரூ. 3 ஆயிரத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அதேபோல அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்து புதிய அறிவிப்பு, மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி என இவை அனைத்தும் தேர்தல் நாடகம். வாக்குகளை குறிவைத்து இவற்றை அறிவிக்கிறார்கள்.

அதே சமயம் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் போன்றவர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தூய்மைப் பணியாளர்கள் சிறுபான்மையாக இருப்பதால், அவர்கள் குரல் எடுபடவில்லை.

திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்ய தேவையில்லை. விளக்கேற்றும் உரிமை இருக்கிறதா இல்லையா? என்பதுதான் தற்போதைய பிரச்சினை.

சமூக நல்லிணக்கத்துக்கு பிரச்சினை வராமல் இருப்பதற்கு, இரு மதங்களின் பெரியவர்களையும் அழைத்து கோயில் வழிபாடு, தர்கா வழிபாடு குறித்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும், என்றார்.

நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்ததை அடுத்து அத்தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சீதாலட்சுமிக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அனுமதி வழங்கப்பட்ட நேரத்தைக் கடந்து பிரசாரம் மேற்கொண்டதாக, சீமான் மீது ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், சூரம்பட்டியில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் மீதான விசாரணைக்கு ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் சீமான் நேற்று ஆஜரானார். அந்த வழக்கின் விசாரணை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT