தமிழகம்

“பாசிசம் என்று சொன்ன பாஜக இப்போது பாயாசம் ஆகிவிட்டதா?” - விஜய்க்கு சீமான் கேள்வி

செய்திப்பிரிவு

“பாஜக பாசிசம் என்றார்கள். இப்போது பாயாசம் ஆகிவிட்டதா? தற்போது வரை பாஜக பற்றி எதுவும் பேசாமல் விஜய் மவுனம் சாதிக்கிறார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நாதக சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரகுபதி பீமன், தீனு, ரா.கார்த்திக் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று குன்னூரில் பிரச்சாரம் செய்தார்.

          

அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இலவசம் என்ற பெயரில் உரிமை தொகை எனவும், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை கொடுப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. நாங்கள் வெற்றி பெற்றால் கல்வி மற்றும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். எனவே, நாதக வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நான் ஒருவன் தான் சொல்கிறேன் இலவசம் தரமாட்டேன். இலவசத்திற்கு கையேந்த வைக்கும் நிலையில் உங்களை வைக்க மாட்டேன். நான் வேலை இல்லை என்ற சொல்லை ஒழிப்பேன். வறுமை, ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் ஒழிப்பேன். பசி என்ற சொல்லே இல்லாமல் ஒழிப்பேன். நடிப்பவன் தான் நன்றாக நாடாளுவான் என்று இன்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்.

நடிப்பவன் கடைசி வரை நடித்துக் கொண்டு தான் இருப்பான். மக்களுக்கான சேவை என்பது செத்து விழுகிறது. ஜனநாயகம் செத்து விழுந்து கேடுகெட்ட பண நாயகம் பிறந்து விடுகிறது. இதனால் மக்களின் நலன் என்பதோ மக்களின் சேவை என்பதோ கேள்விக்குறியாகி விடுகிறது. வாக்குக்கு காசு கொடுக்கும்பொழுது அவர்களின் கையைப் பிடித்து கேளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவெக தலைவர் விஜய்யின் திரைப்பட பிரச்சினையை நாங்கள் தான் பேசி வருகிறோம். பாஜக பாசிசம் என்றார்கள். இப்போது பாயாசம் ஆகிவிட்டதா? தற் போது வரை பாஜக பற்றி எதுவும் பேசாமல் விஜய் மவுனம் சாதிக்கிறார். இறந்த 41 பேருக்கு ஆறுதலாக ஒரு அறிக்கை கொடுக்க நேரமில்லை. ஆனால், உங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்கள். ஒரு தலைவனுக்கே பாதுகாப்பு வேண்டும் என்றால், மக்களுக்கு இவரால் எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்?” என்றார்.

SCROLL FOR NEXT