சென்னை: எம்எல்ஏக்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இலவச கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கார் இல்லாத எம்எல்ஏக்களுக்கு மட்டும் அரசு கார் வழங்கினால்கூட நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் 190 பேரிடம் ஏற்கெனவே சொந்தமாக கார் உள்ளதாக வேட்பு மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், கடன் வாங்கி
புதிதாக கார் எதற்கு? ஒரு கார் விலை குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் என்றாலும், மொத்தமாக ரூ.70 கோடி தேவை. அதேபோல் 234 உறுப்பினர்களுக்கும் மாதம் தலா ரூ.1 லட்சம் வழங்க ஆண்டுக்கு ரூ.28 கோடி தேவை. இதெல்லாம் யாருடைய வரிப்பணம்? விவசாயிகள் விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லை.
ஆனால் ஏற்கெனவே ஒன்றுக்கு இரண்டு கார் வைத்துள்ள எம்எல்ஏக்களுக்கு சொகுசு வாகனம் வழங்க இத்தனை கோடிகளை வாரி இறைப்பதா? மறைமுக மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு போன்றவற்றை சரி செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வ மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.