சென்னையில் நேற்று பேட்டியளித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
‘‘திமுக யாரை எதிர்த்து தொடங்கப்பட்டது? இன்னமும் அந்தக் கிழவரை கைது செய்யாமல் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள் என்று பேசியவர் கருணாநிதி தானே. ஈவெரா-வை கருணாநிதி விமர்சித்ததை விடவா நான் விமர்சித்து விட்டேன்?’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: கீழடியை திராவிட நாகரீகம் என்கிறார்கள், பெருவுடையார் கோயிலை திராவிட கட்டிடக்கலை என்கின்றனர், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திராவிடம் எங்கே இருந்தது? தமிழர் நாகரீகம் என்று அதை சொல்வதில் என்ன பிரச்சினை? திட்டமிட்டு என் மொழியை அழிக்க நினைக்கின்றனர். நான் என் மொழியை, அடையாளத்தை மீட்க வேண்டும் என்றால் திராவிடத்தை அழிக்க வேண்டும். தமிழகத்தில் திராவிடர் - தமிழர் போர் நடக்கிறது. தமிழ்தேசியமா - திராவிடமா? தமிழர்களா - திராவிடர்களா? என்று பார்த்துவிடுவோம்.
அதேபோல் தமிழகத்தை பெரியார் மண் என்று மட்டும் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது? அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், காமராஜர், கக்கனின் மண்ணும் இதுதானே. என்னை ஆர்எஸ்எஸ்-வாதி என்கிறார் திருமாவளவன். ஆனால் அதே பாஜகவுடன் கூட்டணி வைத்து மங்களூருவில் எம்.எல்.ஏ ஆனது நானா? திருமாவளவனா? மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு திருமாவளவன் வீரவணக்கம் செலுத்தியது அரசியல் நாகரீகம் எனில், நான் பாரதியை பற்றி மேடையில் பேசுவது அநாகரிகமா?
திருமாவளவனை அண்ணனாக மதித்து ஒதுங்கி செல்கிறேன். ஏனென்றால் மோதலை எனக்கும், திருமாவளவனுக்கும் உண்டாக்கிவிட்டு, திராவிடர் கூட்டம் சந்தோஷப்படும். எனக்கு எதிரி விசிக, மதிமுக, பாமக போன்றவைகள் அல்ல. அண்ணன், தம்பிக்குள் சண்டை போட நான் வரவில்லை. அதற்காக நான் கட்சி ஆரம்பிக்கவும் இல்லை.
ஈ.வெ.ராவை அண்ணாவும் கருணாநிதியும் விமர்சித்ததை விடவா நான் விமர்சித்திருக்கிறேன்? திமுக யாரை எதிர்த்து தொடங்கப்பட்டது? திராவிடர் கழகத்தில் இருந்து திமுக ஏன் பிறந்தது? இன்னமும் அந்த கிழவரை கைது செய்யாமல் ஏன் விட்டு வைத்துள்ளீர்கள்? என்று பேசியவர் யார்? கருணாநிதி தானே. ஆனால் நான் கேள்வி மட்டும் தான் கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.