நாமக்கல்: “ரூ.8 ஆயிரம் டோக்கனை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? குடித்து குடித்து உயிரிழந்தவர்களின் உயிர்களை திரும்ப வாங்க முடியுமா?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாமக்கல்லில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: “ரூ.8 ஆயிரம் டோக்கனை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்ய முடியும்? குடித்து குடித்து உயிரிழந்தவர்களின் உயிர்களை திரும்ப வாங்க முடியுமா? அழிக்கப்பட்ட இயற்கை வளங்களை திரும்ப கொண்டு வர முடியுமா?
தமிழனின் வீரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் மதுபாட்டிலுக்கு வீரன் என பெயர் வைத்துள்ளனர். நான் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவேன். பனம்பால், தென்னம்பால் இறக்குவேன். 15 ஆண்டுகளாக கத்திவிட்டேன். இனியும் என்னை கத்தவிடாதீர்கள்.
மக்களை கையேந்தும் நிற்கும் நிலைக்கு நான் தள்ளமாட்டேன். அனைத்து தரப்பினருக்கும் அரசு வேலை கிடைக்கச் செய்வேன். ஊழல் இல்லாத, கொலை, கொள்ளை இல்லாத நாடாக தமிழகத்தை மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்.
ஏப்ரல் 23-ம் தேதி சிந்தித்து செயல்படுங்கள். ஒற்றை விரலால் நாட்டையே மாற்றலாம். நமக்கு சாப்பாடு தந்த விவசாயியை நினைத்து, எங்களுக்கு வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெற்றால், மக்கள் வெல்வீர்கள்” என்றார் சீமான்.