

காரைக்குடியில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் வேட்பாளருமான சீமான்.
காரைக்குடி: பல கோடி ரூபாய் பேரம் பேசி என்னை அழைத்தார்கள். நான் போகவில்லை. தனித்து தான் நிற்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், காரைக்குடி வேட்பாளருமான சீமான் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரததில் அவர் பேசியதாவது: மாற்றம் நிகழ சற்று காலம் எடுத்து கொள்ளும். அதுவரை பொறுத்து கொள்ள முடியாத மக்கள், இருப்பதை சகித்து கொண்டு வாழ பழகிவிட்டனர். இதனால் அநீதியை எதிர்க்க துணிவற்று தீய ஆட்சியை சகித்து கொண்டு இருக்கின்றனர்.
ஊழல், வாக்குக்கு பணம், இலவச அறிவிப்பு என்பது வாக்கை பறிக்கிற வஞ்சக சூழ்ச்சி என்று மக்களுக்கு தெரியும். ஆனால், அதை வேறு வழியின்றி சகித்து கொள்கின்றனர். தொகுதிக்கு ஒருவர் ரூ.30 கோடி முதலீடு செய்கிறார் என்றால், வெற்றி பெற்றதும் ரூ.300 கோடி சம்பாரிக்க தான். ஆட்சிக்கு வந்தவர்கள் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றுவதில்லை.
திமுக, அதிமுக மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம் என்கின்றனர். மாணவர்களுக்கு கல்வி கொடுப்பது அரசின் கடமை. அது எப்படி கடனமான மாறியது. கல்விக் கடன் தள்ளுபடி செய்யும் பணத்தில் கல்வி தரத்தை உயர்த்த வேண்டியது தானே? டிவி, குளிர்சாதனபெட்டி என மக்களை பிச்சை எடுக்க வைக்கின்றனர். கையேந்துவது தன்மான இழப்பு.
எனது தாய், மனைவிக்கு ரூ.1,000 கொடுக்க நீ யார் என்று ஏன் கேள்வி கேட்கவில்லை. ரூ.10.50 லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு திட்டமாவது உருப்படியாக கொண்டு வந்தார்களா? நமது பேரில் யாரை கேட்டு கடன் வாங்குகின்றனர். அரசு நடத்துபவனுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை. மருத்துவத்துக்கு ஒதுக்கும் நிதி உயர்கிறது; ஆனால் தரம் உயரவில்லை.
மின்கட்டணத்தை 3 முறை உயர்ந்துவிட்டது. ஆனால் மின்வாரியத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இலவச பேருந்து என்பது ஏமாற்றும் வேலை. மூன்று, நான்கு சீட்டுக்கு, நோட்டுக்கு போய் காத்துகிடக்க எதுக்கு தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும். தனது சாதி, மதத்துக்கு அங்கீகாரம் இல்லை என்று கட்சியை ஆரம்பித்துவிட்டு, அங்கீகாரம் கொடுக்காதவர்களுடன் எதுக்கு கூட்டணி வைக்க வேண்டும்?
அடுத்தவன் மொழியை அறிவு என்கின்றனர். அது எப்படி அறிவாக முடியும்? தமிழகத்தில் எங்கும் தமிழ் இல்லை; தமிழ் மொழி வெற்று முழக்கமாக மாறிவிட்டது. அதை மீட்க தமிழன் ஆட்சி மலர வேண்டும். சாதி, மதம் நமது அடையாளம் இல்லை; மொழி தான் நமது அடையாளம் என நாங்கள் வந்துள்ளோம். பல கோடி ரூபாய் பேரம் பேசி என்னை அழைத்தார்கள்; நான் போகவில்லை. தனித்து தான் நிற்கிறோம்.
மூன்றாவதாக கொண்டு வந்த எங்கள் கட்சியை முதலிடத்துக்கு நீங்கள் கொண்டு செல்வீர்கள் என நம்புகிறோம். தமிழர்கள் பொங்கல் பண்டிகைக்கு அரை கிலோ அரிசிக்கு கூட காத்திருக்கும்நிலை உள்ளது. பரம்பரை வீரம் போய், பதறு கூட்டமாக மாற்றிவிட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் யாரிடமும் கையேந்த விடமாட்டோம்.
கட்டணமின்றி உலகத் தரமான கல்வி, மருத்துவம் தருவோம்; அனைத்து உயிருக்கும் இலவசமாக தண்ணீர் கொடுப்போம். தண்ணீரை விற்க விடமாட்டேன். அனைவருக்கும் வேலை கொடுப்பேன். குறைந்த கட்டணத்தில் மின்சாரம்; எரிவாயு சிலிண்டர்கள் தடையின்றி தருவேன். இலவசம் ஒழிக்கப்படும்” இவ்வாறு சீமான் பேசினார்.