காரைக்குடி கம்பன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சீமானை சந்தித்த தவெக வேட்பாளர் பிரபு அவரை கட்டித் தழுவி வாழ்த்து தெரிவித்தார்.
காரைக்குடி: தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்று சொல்லிவிட்டு அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்யாதது தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
காரைக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான், நேற்று கம்பன் பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டார். அப்போது, தவெக வேட்பாளர் பிரபு அங்கு வந்தார்.
அவர், சீமானை பார்த்ததும் கட்டியணைத்து வாழ்த்து விசாரித்தார். அதைத்தொடர்ந்து ஆலங்குடியார் அரசு பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவை சீமான் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்குகின்றனர். அதேபோல் ஜனநாயக திருவிழாவுக்கு வந்து செல்ல கூடுதல் பேருந்துகளை ஏற்பாடு செய்து கொடுத்திருக்க வேண்டும்.
100 சதவீத வாக்குப்பதிவு என்று சொல்லிவிட்டு போதிய பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யாதது தவறு. தேர்தல் நடத்துவதே ஆட்சி மாற்றத் துக்குத்தான். அதே ஆட்சி தொடரட்டும் என்றால் தேர்தல் எதற்கு, வாக்கு சதவீதம் அதிகரிப்பு வரவேற்கத்தக்கது.
வாக்களிக்காமல் நிராகரிப்பதும் தேச துரோக குற்றம்தான். அரசின் திட்டங்கள் அனைத்தும் தேவை என நினைக்கும்போது வாக்களிப்பதையும் தவறாமல் செய்ய வேண்டும். மக்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வு வரவேற்கத்தக்கது.
அஜித், சிவகார்த்திகேயன் வந்திருந்தால் இதைவிட கூட்டம் அதிகம் வரும். திரையில் பார்த்த ஒரு நடிகரை நேரில் பார்க்கும்போது ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். இவ்வாறு கூறினார்.