சீமான் | கோப்புப்படம் 
தமிழகம்

“வாக்குரிமையை மீட்டெடுக்க முகாம்களை பயன்படுத்துங்கள்” - கட்சியினருக்கு சீமான் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் வாக்குரிமையை மீட்டுக்கொடுக்க சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கட்சி நிர்வாகிகளுக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் முகவரி மாறியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுபட்டவர்கள் பெயர்களைச் சேர்க்க ஜனவரி 18-ம் தேதி வரை அவகாசம் உள்ள நிலையில், ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை நிர்வாகிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர் நீக்கப்பட்டவர்களுக்கு முகாம்களில் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி, அவர்களின் வாக்குரிமையை மீட்டுக்கொடுக்க கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் உதவிட வேண்டும்.

மேலும், கட்சி சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களின் பட்டியலை உடனடியாக தேர்தல் ஆணையத்திடம் வழங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன், ஏற்கெனவே சமர்பித்த பட்டியல் இணையதளத்தில் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்க்க வேண்டும். இது குறித்த விவரங்களை தலைமை அலுவலகத்துக்கும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT