கோப்புப் படம்

 
தமிழகம்

சம வேலைக்கு சம ஊதியம் கோரி டிச.27 முதல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்

சி.பிரதாப்

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வேண்டி இடைநிலை ஆசிரியர்கள் டிசம்பர் 27-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிசம்பர் 27-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து எஸ்எஸ்டிஏ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “திமுக ஆட்சிக்கு வந்தால் சம்பள முரண்பாடுகள் களையப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை எங்கள் பிரச்சினை தீரவில்லை.

இதையடுத்து 3 கட்ட போராட்டங்களை நடத்த முடிவுசெய்துள்ளோம். முதற்கட்டமாக டிசம்பர் 1-ம் தேதி முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வோம். 2-வது கட்டமாக டிசம்பர் 5-ல் சென்னையில் பேரணி நடத்தப்படும்.

இறுதியாக டிசம்பர் 24-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தமிழக முதல்வர் இந்த பிரச்சினையில் உடனே தலையிட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT