அரசுப் பள்ளி சமையலர் பாப்பாள் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை

அவிநாசி அருகே நடந்த சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு.
சமையலர் பாப்பாள் | கோப்புப் படம்

சமையலர் பாப்பாள் | கோப்புப் படம்

Updated on
2 min read

திருப்பூர்: அவிநாசி அருகே அரசுப் பள்ளி சமையலர் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பூர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் சேவூர் அருகே குட்டகம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பணிமாறுதலில் வந்த அருந்தியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாளை, கடந்த 2018-ம் ஆண்டு ஊரில் இருந்த ஆதிக்க சாதியை சேர்ந்த சிலர், 'தலித் பெண் சமைக்கக் கூடாது’ என பிரச்சினை செய்தனர். இதையடுத்து பெண் சமையலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளி சமையலரை சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, இச்சம்பவம் தமிழக அளவில் பரபரப்பானது. இது தொடர்பாக பாப்பாள் அளித்த வன்கொடுமை புகார் தொடர்பாக சேவூர் போலீஸார் 36 பேர் மீது வழக்கு பதிந்தனர். இதில் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டிருந்த அன்றைய வட்ட வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தடையாணை பெற்றிருந்தார்.

அதன்படி உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின்படி, மீனாட்சி விடுவிக்கப்பட்டார். 4 பேர் இறந்துவிட்டனர். 31 பேர் மீது வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எம்.சுரேஷ் இன்று தீர்ப்பு அளித்தார். இதில் 31 பேர் கொண்ட இந்த வழக்கில் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து பழனிச்சாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து 6 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பை ஒட்டி சமையலர் பாப்பாள் மற்றும் அவரது கணவர் பழனிசாமி ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>சமையலர் பாப்பாள் மற்றும் அவரது கணவர் பழனிசாமி</p></div>

சமையலர் பாப்பாள் மற்றும் அவரது கணவர் பழனிசாமி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூரில், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக பாண்டியன் நியமிக்கப்பட்டார். மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கறிஞர் சையத் ஆகியோர் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவும் திருமதி பாப்பாள் அவர்களுக்கு ஆதரவாக கடந்த எட்டாண்டுகளாக வழக்கை நடத்தி வந்தனர்.

திருப்பூர் மாவட்ட வன்கொடுமை வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று பாப்பாள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் ஆறு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தீர்ப்பு சாதிய மனோபாவத்தோடும் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படுகிற தீண்டாமை வன்கொடுமைகளை நிகழ்த்துபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in