சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் 8-வது நாளாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். | படங்கள்: எல்.சீனிவாசன் |
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னையில் டிச.26 முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
8-வது நாளாக ஆசிரியர்கள் குடும்பத்தினருடன், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் அமர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
போராட்டம் குறித்து எஸ்எஸ் டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறோம். கடந்த தேர்தலின்போது எங்கள் கோரிக்கையை ஏற்ற திமுக, அதை தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தது.
ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடு களையப்படாவிட்டால், பள்ளிகள் திறந்த பிறகும் போராட்டம் தொடரும். தமிழக
அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையே இடைநிலை ஆசிரியர் மீதான கைது நடவடிக்கையைக் கண்டித்துள்ளதோடு, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் அ.மாயவன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.