

முன்பு, தேசத்தின் கஜானா பொறுப்பை தன் வசம் வைத்திருந்த ‘சீமான்’ தலைவருக்கு உதவியாளராக இருந்து அதன் காரணமாகவே ஒன்றுக்கு இரண்டு முறை பேரவைக்குச் செல்லும் பெரு வாய்ப்பைப் பெற்றவர் ‘குடி’ தொகுதியின் ‘சுந்தரமான’ கதர்புள்ளி.
அவர் இப்போது கிட்டத்தட்ட அரசியலை விட்டே ஒதுங்கி இருக்கிறார். தனது மாவட்டத்தில் பெரிய ‘சீமானின்’ தேர்தல் அரசியல் முடிவுக்கு வந்து ‘சின்னச் சீமான்’ தலையெடுக்க ஆரம்பித்ததில் இருந்தே ‘சுந்தரமான’ புள்ளிக்கு அரசியலில் இறங்குமுகம் தான்.
தந்தையைப் போல் இல்லாமல் ‘சின்னச் சீமான்’, ‘சுந்தரமான’ புள்ளியை பக்கத்தில் அண்டவிடாமல் பார்த்துக் கொண்டார். இதனால் ஒரு கட்டத்தில் ‘சின்னச் சீமானுக்கும்’, ‘சுந்தரமான’வருக்கும் இடையில் மோதல் முற்றி முட்டிக் கொண்டது. இதனால், கடந்த மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஆதரவாளர்கள் சகிதம் டெல்லிக்கே போய் முகாம் போட்ட ‘சுந்தரமான’ புள்ளி, இம்முறை ‘சின்னச் சீமானுக்கு’ சீட் கொடுக்கவே கூடாது என டெல்லி தலைவர்களை எல்லாம் சந்தித்து மனு கொடுத்தார்.
ஆனால், அப்படியும் தந்தையின் செல்வாக்கில் சீட்டை பெற்றுவிட்டார் ‘சின்னச் சீமான்’. இதனால், நடப்பது நடக்கட்டும் என ஒதுங்கியே இருந்த ’சுந்தரமான’ புள்ளி தற்போது, “நான் உங்கள் பக்கம் வந்துவிடுகிறேன்” என பனையூர் பார்ட்டிக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறாராம்.
“முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ‘சீமான்’ தலைவருக்கு உதவியாளராக இருந்து அரசியலில் கோலோச்சிய உங்களை உரிய அந்தஸ்து கொடுத்து அழைக்க வேண்டும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று சொல்லி இவரது ‘ஜம்ப்’ அப்ளிக்கேஷனை பனையூர் பார்ட்டியில் வெயிடிங்கில் வைத்திருக்கிறார்களாம்.