எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்
“கூட்டணிக் கட்சிகளுடன் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும்” என அமித் ஷாவை சந்தித்த பின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிமுக எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என அதன் கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தச் சூழலில்தான் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று முன்தினம் இரவு சந்தித்து பேசினார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.
இதையடுத்து, நேற்று காலை சென்னை புறப்பட்ட பழனிசாமி டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து தமிழக தேர்தல் நிலவரம் பற்றி கலந்து பேசினோம்.
தேர்தலில் நாம் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தோம். சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு. சசிகலா குறித்து பேசவில்லை. அதை விடுங்கள்.
எங்கள் கூட்டணியில் குழப்பம் எதுவும் கிடையாது. எங்களைப் பொறுத்தவரை சுமுகமாக, மிகச்சிறப்பாக, எழுச்சியாக கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் ஆரம்பிக்கப்படும். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.
திமுக கூட்டணியில்தான் பிரச்னை இருக்கிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்றே தெரியவில்லை. தேஜ கூட்டணி ஒன்றாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
7 மற்றும் 8-ல் ஈரோடில் பிரசாரம்: இதற்கிடையே, “மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதி வாரியாக பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக வரும் 7, 8--ம் தேதிகளில் பிராசார சுற்றுப்பயணத்தை பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.
7-ம் தேதி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் அந்தியூரில் மாலை 4.30 மணிக்கும், 8-ம் தேதி ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறையில் மாலை 4 மணிக்கும், பவானியில் 5.30 மணிக்கும் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என அதிமுக அறிவித்துள்ளது.