சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பகல் நேரங்களில் நேரடி வெயிலில் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று தொழில் நிறுவனங்களுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. கட்டுமானப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் போன்றோர் நீண்டநேரம் நேரடி வெயிலில் பணியாற்றுவதால், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் உடல் வெப்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்க தொழில் நிறுவனங்களும், கட்டிட உரிமையாளர்களும் தொழிலாளர் நலன் கருதி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அதிக வெப்ப நிலையில் நேரடியாகப் பணியாற்றும்போது உடலில் விரைவாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்.
இதை கவனிக்கத் தவறினால் உடல் உறுப்புகளின் இயக்கம் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி நிறுவனங்களும், கட்டிட உரிமையாளர்களும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுட்டெரிக்கும் பகல் நேரத்தை தவிர்த்து, அதிகாலை முதல் காலை வரையிலும், மீண்டும் மாலை முதல் இரவு வரையிலும் பணி நேரங்களை மாற்றியமைக்க வேண்டும்.
உடல் சோர்வைத் தவிர்க்க தொழிலாளர்களுக்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பானங்களை வழங்க வேண்டும். திறந்தவெளியில் பணியாற்றுபவர்களுக்கு போதிய நிழல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.