தமிழகம்

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழப்பு

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பள்ளி மாணவி உயிரிழந்தார். ஏற்கெனவே இம்மாதத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பள்ளி மாணவி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கூடுதலாகி உள்ளது. புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த முகமது இர்பான் (22) என்ற இளைஞர் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த வாரம் உயிரிழந்தார். மூலக்குளம் பிச்சைவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிணி (19) டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார்.

நோணாங்குப்பத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்த மாணவி நஷீதா (16) அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இன்று அவர் டெங்குவால் உயிரிழந்தது தெரியவந்தது. ஏற்கெனவே இம்மாதத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பள்ளி மாணவி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை உரிய நடவடிக்கையை எடுக்க முதல்வரிடம் சட்டப்பேரவைத் தலைவர் தொடங்கி எம்எல்ஏக்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் என அதிகாரிகள் செயல்படுகின்றனர். நடவடிக்கையை புதுச்சேரி அரசு துரிதப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியமாக டெங்கு கொசு உருவாகும் பல விஷயங்களை அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக புதுச்சேரியில் பல காலி மனைகளில் மழைநீர் தேங்கியிருப்பதும் டெங்கு கொசு உற்பத்திக்கு முக்கிய காரணம். இதுபோல் காலிமனைகளின் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் டெங்கு பரவலுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT