

நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: “ஆளுங்கட்சி எம்எல்ஏ-வின் பாலியல் குற்றச்சாட்டுகளை திசைதிருப்பும் வகையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு செயல்படுகிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றத்துக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய இருந்த என்னை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டம் 25 மற்றும் 26 ஆகிய பிரிவுகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது.
தவெக நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், அந்த பிரச்சினையை மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் தமிழக முதல்வர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் இன்றுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்சினைகளை மடைமாற்றம் செய்வதற்காக தமிழக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் உச்சபட்ச நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அனுமதி மறுத்து வருகின்றனர். இதிலிருந்தே அவர்களுக்கு என்ன தைரியம் இருக்கிறது என்று தெரிய வருகிறது.
இதற்கு மேல் இறைவன்தான் இந்த ஆட்சியின் மீது தீர்ப்பு எழுத வேண்டும். பக்தர்களிடமிருந்து காணிக்கை பெற்று கோயில்களை பராமரித்து வரும் இந்து சமய அறநிலையத்துறை தீபத் தூணில் தீபம் ஏற்றுவதை மறுத்து வருகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும் கோயில் விவகாரத்தில் இதுபோன்ற நிலை இருந்ததில்லை.
தமிழகத்தில்தான் இப்படி ஒரு நிலை இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத் துறையை வைத்துக்கொண்டு பக்தர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் முதல்வர் விஜய் செயல்பட்டு வருகிறார். அவரது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.