புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில், கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இந்தப் பணியிடங்களுக்காக 654 பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் 440 பேர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இதனையடுத்து, 54 நபர்களின் பெயர் இறுதிசெய்யப்பட்டு அவர்களுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரி, கருணை அடிப்படையில் 2016-ம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி, கனக மணி, கவுசல்யா, ரஞ்சித்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தேர்வு நடைமுறைகளில் மனுதாரர் பங்கேற்காத நிலையில், பணி நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடர அவருக்கு தகுதி இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஈஸ்வரி, உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றம் டிவிசன் அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில், இளநிலை உதவியாளர் பணிக்கான முறையான விளம்பரங்கள் வெளியிடப்படாததால் தங்களுக்கு உரிய தகுதிகள் இருந்தும், தேர்வு நடைமுறைகளில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்திருந்தனர்.
மேலும், அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கின் காரணமாக, விதிமுறைகள் பின்பற்றப்படாமலும், இடஒதுக்கீட்டு நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் ஒரே நாளில் 54 பேர் நியமிக்கப்பட்டதாகவும், அந்த நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நடைமுறைகள் பின்பற்றப்படாமல் கோவை மாநகராட்சியில் 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
இந்த நியமனங்கள் சட்டவிரோதமானவை என்றும் நேர்மையற்ற முறையில் புறவாசல் வழியாக நடைபெற்ற நியமனங்களாக கருதப்பட வேண்டியவை, எனவே கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, முறைகேடான நியமனங்களுக்குக்காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலியாகும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை விதிமுறைகளின்படி நியமனம் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு கடந்த ஜூன் 18-ம் தேதி ஆணையிட்டது.
மேல்முறையீட்டு மனு: சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை எதிர்த்து பணியை இழந்த நிவேதா, சக்தி கவிதா, வினோத் குமார் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பாலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இளநிலை உதவியாளர்கள் பணிக்கு 654 விண்ணப்பங்களில் 440 விண்ணப்பங்களை ஏற்று அதன் பின்னர் 54 விண்ணப்பங்களை ஒரே நாளில் இறுதி செய்து நியமன ஆணை வழங்கியது எப்படி, நீதிபதிகளாகிய எங்களுக்கே தினசரி பட்டியலிடப்படும் சுமார் 65 வழக்குகளை முழுமையாக ஆராய போதிய நேரம் கிடைக்காத நிலையில், 654 விண்ணப்பங்களை பெற்றுகொண்டு அதில் 440 விண்ணப்பங்களை ஒரே இரவில் எவ்வாறு பரிசீலனை செய்திருக்க முடியும்?
மேலும் விண்ணப்பங்கள் வரவேற்பதற்கு ஈ-பேப்பரில் மட்டுமே விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது ஏன்? 54 பேர் எந்த தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள்? அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் எங்கே என கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், 54 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் சட்டவிரோதம் இருப்பதாகவும் விதிமுறைகள் மீறல் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாகவும் கூறினர்.
அப்போது மனுதாரர்கள் தரப்புக்கு ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் வி.வி.கிரி, தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ள மனுதாரர்கள் மாற்றுத் திறனாளிகள் ஆவர். எனவே, மீண்டும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படும்போது, தற்போது உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு கருணை அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
ஆனால், மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், முறைகேடாக பணியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் அமர்வு வழங்கிய ஆணையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.