கோப்புப் படம்
புதுடெல்லி: நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடங்களை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு அடையாளம் காண உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மாநிலத்தில் அரசு மாறியுள்ளதால் மனநிலையிலும் மாற்றத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:
நீதிபதிகள்: நவோதயா பள்ளிகளுக்கான இடத்தை அடையாளம் காண பிறப்பித்த உத்தரவை ஏன் செயல்படுத்தவில்லை? நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பதில் இருக்கும் சிக்கல் என்ன? எதற்காக அதை எதிர்க்கிறீர்கள்?
தமிழக அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா: எந்த மாநிலத்தில் போதிய பள்ளி கட்டமைப்புகள் இல்லையோ அந்த மாநிலத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவலாம், தமிழகத்தில் பள்ளி கட்டமைப்புகள் மிகவும் சிறப்பாக உள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வி வழங்கப்படுகிறது ஏற்கெனவே சிறந்த கட்டமைப்பை கொண்ட தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு. மேலும் நவோதயா பள்ளிகள் மும்மொழி கொள்கையை பின்பற்றுபவை என்பதால், அது தமிழகத்தின் இரு மொழி கொள்கைக்கு முரணானது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் அதில் மாற்றம் கொண்டு வர அழுத்தம் கொடுக்க முடியாது.
நீதிபதிகள்: இது மாநிலம் தனி வழியில்தான் பயணிக்கும் என்று கூறுவதாக உள்ளது, மொழிதான் பிரச்சினை என்றால் இந்திக்கு பதிலாக வேறு ஒரு மொழியை பயிற்றுவிக்கலாமே, நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசு தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்: இந்தியா கூட்டாட்சி தத்துவத்தில் இயங்கக்கூடிய நாடு, எனவே ஒரு விஷயத்தை எங்கள் மீது திணிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படக் கூடாது.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ்: மொழிக் கொள்கையை பொறுத்தவரை அமர்ந்து பேசினாலே தீர்வு காண முடியும், இந்தி அல்லது வேறு மொழியைக்கூட மூன்றாவது மொழியாக எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் சாராம்சம்.
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை தீவிரமாக பற்றி கொண்டுள்ளது, இந்தியை திணிப்பது தான் அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.5,000 கோடிக்கு மேலான கல்வி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்காமல் அழுத்தம் கொடுத்து வருகிறது.இவ்வாறு வாதம் நடந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: தமிழகத்தில் புதிய அரசு மாறியுள்ளது, அதனால் அதன் மனநிலையிலும் சில மாற்றத்தை எதிர்பார்க்கிறோம், எனவே, நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான நிலத்தை முதலில் அடையாளம் காணுங்கள் பிற பிரச்சினைகளை நாம் ஒவ்வொன்றாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம். தமிழக அரசு கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது, எவ்வளவு செலவு செய்கிறது என்பது தெரியும். அதற்காக மிகப்பெரும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக்கொள்வதால் அவர்களிடம் சரணடைந்து விட்டோம் என்று அர்த்தம் கிடையாது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்காக நிலங்களை அடையாளம் காண ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாநில அரசு செயல்படுத்த வேண்டும், இதற்காக 3 மாத கால அவகாசம் வழங்குகிறோம்.
மேலும், நவோதயா பள்ளிகளை நிறுவுவதில் உள்ள முரண்பாடுகளை களைய, மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க வேண்டும். மாநில அரசின் கொள்கையின் அடிப்படையிலும், கூட்டாட்சி தத்துவத்துக்கு மதிப்பளித்தும் இந்த பேச்சு வார்த்தை அமைய வேண்டும்.
இந்த பேச்சுவார்த்தையின்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கல்வி நிதி ரூ.5,000 கோடி குறித்தும் விவாதித்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.