புதுடெல்லி: தமிழ்நாட்டில் காலியாக உள்ள தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையர்கள் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்தால் தகவல் அறியும் விண்ணப்பங்கள் ஏராளமாக தேங்கியுள்ளதாகவும், கேட்கப்படும் தகவல்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி அஞ்சலி பரத்வாஜ் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2019-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அதில், தகவல் ஆணையத்தின் ஆணையர்களின் நியமனங்கள் குறித்த காலத்தில், வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்ததோடு, மத்திய, மாநில அரசுகளுக்குப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஆனால் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடினார். இதனையடுத்து அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை எந்த தாமதமும் இன்றி அமல்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு அமல்படுத்தப்பட்ட பின்பு அதுகுறித்த நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் ஆணையிட்டது.
இந்நிலையில், மத்திய மற்றும் மாநிலத் தகவல் ஆணையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தமிழ்நாட்டில் தலைமைத் தகவல் ஆணையர் உட்பட 5 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அவை இதுவரை நிரப்படாமல் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், கடந்த மாதம் தான் அதிகாரிகள் ஓய்வு பெற்றனர், அதன் காரணமாகவே இக்காலியிடங்கள் ஏற்பட்டன என்றும், தேர்வுக் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதால் நியமனங்களை முடிக்க 3 மாத காலம் அவகாசம் வேண்டுமெனக் கோரினார்.
ஆனால் தமிழக அரசு தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தகவல் ஆணையங்கள் முடங்குவது பொதுமக்களின் உரிமையைப் பாதிக்கும், எனவே 3 மாத கால அவகாசம் வழங்க முடியாது எனவும், 6 வாரங்களுக்குள் நியமனங்களை முடித்து அதுகுறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என ஆணையிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.