சென்னை: ஆந்திராவில் கைது செய்து அழைத்து வந்தபோது போலீஸார் மீது கல்வீசி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் சவுக்கு மீடியா சிஇஓ-வான யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்தாண்டு டிச.13 அன்று கைது செய்தனர்.
அந்த வழக்கில் மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு மார்ச் 25 வரை உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால் அந்தக் காலக்கெடு தாண்டியும் அவர் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் சரண் அடையவில்லை.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், ஓங்கோலில் தலைமறைவாகியிருந்த சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு வந்தனர். அப்போது, வரும் வழியில் சிறுநீர் கழிப்பதற்காக போலீஸ் வாகனம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது.
மற்றொரு வாகனத்தில் வந்த சிலர் போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டி, போலீஸ் வாகனம் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, போலீஸார் மீது கல்வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சவுக்கு சங்கர் மீதும், அவருக்கு ஆதரவாக மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது.
அந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``அரசியல் அழுத்தம் காரணமாக போலீஸார் தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் உள்நோக்கத்துடன் இந்த பொய் வழக்கை பதிவு செய்துள்ளனர்.
போலீஸாரை கல்வீசி தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக எனக்கு எதிராக பொய்யான கதை புனையப்பட்டுள்ளது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை'' எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, ``போலீஸார் சவுக்கு சங்கர் மீது வழக்கு மேல் வழக்கு என பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்'' என்றார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆ. தாமோதரன், ``உயர் நீதிமன்றம் அளித்த இடைக்கால ஜாமீன் முடிவடைந்த பின்னரும் அவர் நீதிமன்றத்தில் சரணடையாமல் தலைமறைவானார்.
சவுக்கு சங்கர் மீது 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே ஆந்திரா ஓங்கோலில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்க கொண்டு வந்தபோது போலீஸாரின் வாகனம் மீது கல்வீச்சில் ஈடுபட்டு அவரை மீட்க முற்பட்டனர். அதன் காரணமாகவே, கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது'' என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ``கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சவுக்கு சங்கர் தினமும் புழல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்'' என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.