சென்னை: நிபந்தனை ஜாமீனை மீறி, நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் 2 மோசடி வழக்குகளைப் பதிவுசெய்து கடந்த டிச.13 அன்று கைது செய்தனர். அவருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.
மார்ச் 25-க்குப் பிறகு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய சவுக்கு சங்கர் தலைமறைவானார். இந்நிலையில் சவுக்கு சங்கர் தன் மீதான 2 வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், சவுக்கு சங்கர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சென்னை போலீஸார் தேடி வருவதாக தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணை கோரும் 2 வழக்குகளிலும் ஏற்கெனவே விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்.27-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க தலைமறைவான சவுக்கு சங்கரை தனிப்படை அமைத்து சென்னை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று அங்கு விரைந்த சென்னை போலீஸார் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த அவரது தோழி மாலதியும் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவரையும் போலீஸார் சென்னை அழைத்து வந்தனர். மாலதி மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.