தமிழகம்

“திமுகவில் இளைஞர்களுக்கு பொறுப்புகளை வழங்குவதில் கருத்து வேறுபாடு கூடாது” - சாத்தூர் ராமச்சந்திரன்

இ.மணிகண்டன்

விருதுநகர்: “விரைவில் உள்ளாட்சித் தேர்தலும், இடைத்தேர்தலும் வரவுள்ளன. அவற்றில் நாம் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெற வேண்டும்” என்று திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, கட்சி மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசுகையில், “திமுக என்ற இயக்கம் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. இந்த இயக்கத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கு நமது ஒட்டுமொத்த ஆதரவையும் கொடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் நகர, ஒன்றிய, வட்ட எல்லைகளை வரையறுத்து எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு களப்பணியாற்ற வேண்டும்” என்று கூறினார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், “கட்சியில் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. இதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது. உங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை நீங்களே பேசி தீர்த்துவிட்டு ஒன்றாக எங்களிடம் விண்ணப்பத்தை கொண்டுவர வேண்டும்.

ஆனாலும், கட்சியில் இதுவரை பொறுப்பு வகித்தவர்களின் தியாகங்களை என்றும் மறக்க மாட்டோம் என்றும், அவர்களை எப்போதும் போற்றுவோம் என்றும் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ளது. இந்த ஆட்சியும் விரைவில் தேர்தலை நடத்துவதாக கூறியுள்ளது. இடைத்தேர்தலும் வரவுள்ளது. அவற்றில் நாம் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றிபெற வேண்டும்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்களான மாநில இளைஞரணி இணைச் செயலாளர் இன்பா ரகு, தென்காசி எம்.எல்.ஏ. கலை கதிரவன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SCROLL FOR NEXT