

திருபுவனம்: திருவிடைமருதூர் வட்டம், திருபுவனம் தமிழ்நாடு வாணிப கழக அலுவலகம் முன்பு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட கவுரவத் தலைவர் ராமானுஜம் தலைமை வகித்த இந்தப் போராட்டத்தில், மாவட்டத் தலைவர் சிவனருள்செல்வன், மாவட்டப் பொருளாளர ராமலிங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ‘காலி மது பாட்டில்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், மதுபான பாட்டில்களை கொண்டு வருவதற்கான வாடகை அரசே வழங்க வேண்டும். கடைக்காரர்களிடம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும், திறக்கப்படாத மதுபான பெட்டிகளில் சேதமடையும் பாட்டில்களுக்கு 10 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்த அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டிணம் மாவட்டங்களில் உள்ள 89 கடைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தகவலறிந்து அந்த இடத்துக்கு வந்த டாஸ்மாக் துணை மேலாளர் சங்கர் மற்றும் திருவிடைமருதூர் காவல் ஆய்வாளர் மீனா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பணியாளர்கள், தமிழக அரசு, ஊதியம் உயர்வு மற்றும் ரூ.3 ஆயிரம் படி வழங்கினார்கள். மாதத்தோறும் ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரம் அளவில் பல்வேறு வகையில் செலவாகிறது. எனவே, எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தை தொடருவோம்’ என கூறியதையடுத்து, அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு அலுவலகத்துக்குள் சென்றனர்.