மாற்றுத் தலைவராக பேரவையை வழிநடத்திய தவெக உறுப்பினர் சத்யபாமா.
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று, தவெகவைச் சேர்ந்த சத்யபாமா மாற்று பேரவைத் தலைவராக அவையை வழிநடத்தியது கவனம் ஈர்த்தது.
தமிழக சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் இல்லாதபோது பேரவை துணைத்தலைவர் அவையை வழிநடத்துவார். இவர்கள் இருவரும் இல்லாதபோது மாற்று பேரவைத் தலைவர்கள் அவையை வழி நடத்துவார்கள்.
அந்த வகையில் நேற்று, மாற்று பேரவைத் தலைவர்களில் ஒருவரான திருப்பூர் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ சத்யபாமா, பேரவைத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து அவையை வழிநடத்தினார்.
இதுகுறித்து, பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “லேடி வெலிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி, இங்கே பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்டகாலமாக எல்லோருக்கும் இருக்கக்கூடிய எதிர்பார்ப்பு.
மாற்று தலைவராக நீங்கள் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
தங்கம் தென்னரசுவின் வாழ்த்தை எழுந்து நின்று சத்யபாமா ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் சத்யபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அவையை 15 நிமிடங்கள் நடத்திய சத்யபாமா, பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் மீண்டும் அவைக்கு திரும்பியவுடன், இருக்கையிலிருந்து எழுந்து சென்றார்.
தகுதிப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு
இதையடுத்து ஜே.சி.டி.பிரபாகர் பேசும்போது “தற்காலிக அவைத் தலைவராக இருந்தவர், சபையை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
அவருக்கு வாழ்த்துகள். இதுபோன்ற தற்காலிக பொறுப்புகள் வழங்குவதன் மூலமாக பலர் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.
இதற்கு முன்பு 1937-ம் ஆண்டு ருக்மணி லட்சுமிபதி, சென்னை மாகாண சட்டப்பேரவையின் துணை பேரவைத் தலைவராக இருந்தார்.
இதையடுத்து 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் ஏ.எஸ்.பொன்னம்மாள் தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
நீண்ட காலத்துக்குப்பின் தற்போது அந்த இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்திய பெருமையை சத்யபாமா பெற்றுள்ளார்.