கோப்புப் படம்

 
தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மார்ச் 23-ல் தீர்ப்பு

விசாரணை நீதிமன்றம் அறிவிப்பு

கி.மகாராஜன்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், மார்ச் 23-ல் தீர்ப்பளிக்கப்படும் என விசாரணை நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரக் கட்டுப்பாடு தாண்டி கடையை திறந்து வைதிருந்ததாக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகன் இருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த நிலையில் முதலில் பெனிக்ஸ், பின்னர் ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தந்தை, மகன் கொலை வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.

          

இதையடுத்து சிபிஐ போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து உள்ளிட்ட 9 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. கைதான 9 பேரும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியானது. கைதான நாளிலிருந்து 9 பேரும் சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டது. அந்த கால அவகாசம் முடிந்த நிலையில் மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு விசாரணை நீதிமன்றம் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் 3 மாத அவகாசம் வழங்கி கடந்தாண்டு நவம்பர் 26-ல் உத்தரவிட்டது.

இதையடுத்து, விசாரணை நீதிமன்றத்தில் விசாரணை சூடுபிடித்தது. தினமும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதுவரை அரசு தரப்பில் 52 சாட்சிகள், குற்றச்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 271 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. லத்தி உள்ளிட்ட 57 சாட்சியப் பொருட்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விசாரணை முடிந்த நிலையில் மார்ச் 23-ல் தீர்ப்பு அளிக்கப்படும் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

SCROLL FOR NEXT