சென்னை: அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, இந்தியாவில் தரை, கடல், வான்வழி போக்குவரத்து, பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதன் கட்டமைப்பு முழுமை பெற்று துல்லியமான தகவல்களை பெறமுடியும்.
அவ்வாறு இதுவரை ஏவப்பட்ட 11 வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களில் 3 மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளன. பழுதடைந்த செயற்கைக் கோள்களுக்கு மாற்றாக புதிய செயற்கைக் கோள்களை தயாரித்து இஸ்ரோ தற்போது விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.
அதன்படி இஸ்ரோ வடிவமைத்துள்ள என்விஎஸ்-03 (ஐஆர்என்எஸ்எஸ் 1 எல்) வழிகாட்டி செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு 11.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான கவுன்ட்-டவுன் நேற்று இரவு தொடங்கியது. என்விஎஸ் செயற்கைக் கோள் 2,250 கிலோ எடை கொண்டது. இது புவி ஒத்திசைவு சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கான துல்லியமான இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேர சேவைகளை இந்த செயற்கைக் கோள் வழங்கும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிதுல்லிய அணு கடிகாரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.