விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வீடூர் அடுத்த கணபதிபட்டு கிராமத்தில் அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டி காப்பாற்றப்பட்ட அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தது. அதிமுக மீண்டும் வலிமை பெற அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.
அனைவரையும் இணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு அதிமுக மீது நம்பிக்கை வரும். அதிமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையை தொண்டர்களுக்கு உருவாக்க வேண்டும். மீண்டும் பழைய அதிமுக உருவாகிவிட்டது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட வேண்டும்.
அனைவரையும் அரவணைத்து பேசுங்கள், இதற்கு நானும் ஒத்துழைப்பு தருகிறேன் என்று தான் கூறினேன். நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இயக்கம் வலிமை பெற நான் என்னுடைய ஒத்துழைப்பை முழுமையாக தருகிறேன் என்று கூறினேன். நான் கூறிய 24 மணி நேரத்தில் என்னுடைய தொகுதியை சேர்ந்த 120 கிளைக் கழக செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகளை நீக்கும் இடத்திலிருந்து தற்போது தொண்டர்களை நீக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். இது எனக்கு வேதனையாக உள்ளது. எனக்கு கோபம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
‘சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவார்களா?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பிரிந்தவர்கள், சென்றவர்கள், நீக்கி வைக்கப்பட்டவர்கள், ஒதுங்கி இருப்பவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்போம். மறப்போம், மன்னிப்போம். பழையதைப் பற்றி நினைக்காமல். இனி என்ன செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட வேண்டும்.
தவறு எல்லா பக்கமும் இருக்கலாம். தவறைப் பார்க்காமல் அனைத்தையும் மறந்து ஒரே எண்ணம், சிந்தனையாக அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து, இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற ஒரு சிறு துரும்பையும் விடக்கூடாது” என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
சசிகலா, டிடிவி, ஓபிஎஸ்சை இணைக்க எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்
அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி, கோவையில் கூறியதாவது: அதிமுக இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது பெரிய வருத்தம் தான். மூன்று மாதத்திற்கு முன்பு தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. இன்றைய சூழலில் சசிகலா மட்டுமல்ல, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உட்பட வெளியில் சென்றவர்கள், பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து பொதுச் செயலாளர் அரவணைப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.