சென்னை: தமிழகத்தில் சர்வம் ஏஐ நிறுவனம் சார்பில் ரூ.10,000 கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்வம் ஏஐ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ரூ.10,000 கோடியில் 1,000 பேருக்கு வேலையளிக்கும் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம், தமிழக அரசு - சென்னை ஐஐடி - சர்வம் ஏஐ நிறுவனம் இடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இதில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தாரேஸ் அகமது, சர்வம் ஏஐ நிறுவன இணை நிறுவனர் பிரத்யுஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் இந்த முதலீட்டுத் திட்டம் தொடர்பாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:
இன்று உலகமே செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நோக்கி நகர்ந்து வருகிறது. மக்களிடையே ஏஐ மூலமாக எந்தவிதமான பாதிப்புகள் பணிகளில் ஏற்படும் என்ற கவலை இருக்கும். ஆனால், தற்போது வேலைவாய்ப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், வேலை வாய்ப்புகளை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில் விழிப்புணர்வு அளிக்க சர்வம் நிறுவனத்துடன், ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, தொழில் துறை செயலர் இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழக மக்களுக்கு மிகவும் உதவும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் தேவைப்படும். தமிழில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பம் உருவாக உள்ளது. தமிழக மக்களின் தகவல்கள் திருடப்படுவது இதன்மூலம் தவிர்க்கப்படும். தமிழகத்துக்கான தனிப்பட்ட மையமாக இது செயல்படும். இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அனைவரும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நிலையில், நம் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. இதனால், நம் வீட்டுக் குழந்தையை முதலில் வளர்க்க முயற்சிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், ‘‘விவசாயம், மருத்துவம் மற்றும் பல்வேறு துறையில் ஏஐ தொழில்நுட்பம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த தகவல் மையம் ஒவ்வொரு துறையும், தனியார் நிறுவனமும் தங்களின் தரவுகளை ஒரே பகுதியில் இணைத்து கொள்ளும் வகையில் அமைக்கப்படும். அனைத்து மக்களையும் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு திட்டமாக இந்த திட்டம் உள்ளது’’ என்றார்.
கொள்கை வெளியீடு: முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தொழில் துறை சார்பில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கை (Tamil Nadu Warehousing Policy) 2026 மற்றும் தமிழ்நாடு சுழற் பொருளாதார முதலீட்டுக் கொள்கை (Tamil Nadu Circular Economy Investment Policy) 2026 ஆகிய கொள்கைகளை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்டனர்
சேமிப்புக் கிடங்கு கொள்கையானது, டெல்டா மற்றும் தொழில் துறையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்கு நிதி சார்ந்த சிறப்பு ஊக்க சலுகைகள் வழங்கும். தகுதியான முதலீடுகளில் 25 சதவீத நிலையான மூலதன மானியம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்) மற்றும் நில விலை மானியமாக வணிக நில விலையில் 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது.