தமிழகம்

அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை

அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் தொடங்கி வைத்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தனியார் அரிசி ஆலைகள் மற்றும் பிற ஆதாரங்களின் வாயிலாக அரிசியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

அந்த வகையில், மாநிலம் முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இத்திட்டத்தின்கீழ், சென்னையில் உள்ள 11 அமுதம் அங்காடிகள் மற்றும் 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 அங்காடிகளில் வழங்கப்படுகிறது. இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை, கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொதுமக்களின் தேவைக்கேற்ப ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசிவழங்கப்படும். இதன்மூலம் பொதுமக்களுக்கு அரிசி விலை உயர்வின் தாக்கம் குறையும் எனக் கூறப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT