அண்ணாமலை

 
தமிழகம்

‘அதே டெய்லர்... அதே வாடகை!’ - தவெக அரசு மீது அண்ணாமலை விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: “பொய், புரட்டுகளை மக்களிடம் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட உண்மை சரிபார்ப்பக வலைதள கணக்கு, தற்போதும் அதே வேலையைத்தான் தொடர்கிறது” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “குறிப்பிட்ட 3 ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டதற்கு முதலில் நன்றி. ஆனால், முந்தைய திமுக அரசின் அவல நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும் செட்டாப் பாக்ஸில் எப்படி தொழில்நுட்ப பிரச்சினைகள் வரும்?.

பொய், புரட்டுகளை மக்களிடம் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த உண்மை சரிபார்ப்பக வலைதள கணக்கு, தற்போதும் அதே வேலையைத்தான் தொடர்கிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. கன்னத்தில் ஒரு மருவை மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ‘அதே டெய்லர், அதே வாடகை’ (‘வெற்றிக்கொடி கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபன் - வடிவேலு நகைச்சுவை வசனம்) ஏமாற்று வேலைதான் இது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து 3 முன்னணி செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்தது. அதில், ‘செய்தி சேனல்கள் நீக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே 3 சேனல்களை தற்காலிகமாக ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. விரைவில் இப்பிரச்சினை சரிசெய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தையே அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

SCROLL FOR NEXT