சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ்
சென்னை: உப்பு குறைப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் இன்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், “ இன்று சுகாதாரத்துறை சார்பாக இரண்டு அறிவிப்புகளை வெளியிடுகிறேன். இதுவரை மருத்துவத் துறை, ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை, நோய் வந்த பிறகு, அதனை குணப்படுத்தும் நோக்கில் தான் முதன்மையாக கட்டமைக்கப்பட்டிருந்தன.
வரும் முன் காப்பதே சிறந்தது என்ற வகையில் சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்தும் வகையில், மக்களின் அன்றாட உணவில் உள்ள உப்பின் அளவை குறைக்கும் வகையில் மாநில அளவிலான இயக்கம் ஒன்றை அமைக்க இந்த அரசு முன் வந்துள்ளது.
ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி அனைவரையும் தொடும் எளிய பொருள் உப்பு ஆகும். அதே வகையில் மக்கள் அனைவரின் நலனையும் தொட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாகும் திட்டம் இந்த உப்பிலிருந்தே தொடங்குகிறது.
உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக நோய் என தொற்றா நோய்கள் தமிழகத்தில் மிக முக்கிய சுகாதார பிரச்சினையாக மாறியுள்ளன. தமிழகத்தில் மருத்துவ சான்றளிக்கப்பட்ட இறப்புகளில் ஏறக்குறைய 50 சதவீதம் இதயம் மற்றும் ரத்தக் குழாய் நோய்களால் நிகழ்கிறது.
தமிழகத்தில் தோராயமாக ஒரு கோடியே 80 லட்சம் மக்கள் உயர் ரத்த அழுத்த நோயுடன் வாழ்கின்றனர். இந்த நோய்க்கு உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்குகிறது. ஆனால், தமிழக மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 7-8 கிராம் உப்பை உட்கொள்கின்றனர்.
தென்னிந்திய உணவு முறையில், நாம் உட்கொள்ளும் உப்பில் 88% வீட்டு சமையல் மூலம் சேர்க்கப்படும் உப்பிலிருந்தே வருகிறது. ஒருநாளைக்கு உட்கொள்ளும் ஒரு கிராம் உப்பை குறைத்தாலும் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்து இதய நோய் இறப்புகளில் 7 சதவீதமும், பக்கவாத இறப்பில் 10 சதவீதமும் குறையும்.
சோடியம் குறைவான மாற்று உப்பை பயன்படுத்திய 21 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பன்னாட்டு ஆய்வில், பக்கவாதம் 14 சதவீதமும், மொத்த இறப்புகள் 12 சதவீதமும் குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் தொற்றா நோய் தடுப்பில் குறைந்த செலவில் அதிக பயன் தரும் முறையாக உப்புக் குறைப்பு முறையை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அதிக உப்பு உட்கொள்ளலை குறைக்கும் மாநில உத்தியை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக மக்களின் தற்போது உப்பு உட்கொள்ளல் அளவை கணக்கிட மாநில அளவில் சிறுநீர் மாதிரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். அரசு நேரடியாக நடத்தும் உணவகங்கள் மற்றும் சமையலறைகளில் உப்பை குறைக்கும் திட்டம் கொண்டு வரப்படும். சோடியம் குறைந்த மாற்று உப்பை மக்களுக்கு கொண்டு செல்லும் முன்னோட்ட திட்டம் மேற்கொள்ளப்படும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சமூக நல பணியாளர்கள் மூலம் உப்புக் குறைப்புப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்றவற்றில் மறைந்துள்ள உப்பு குறித்தும், அதிக உப்பு பயன்பாட்டை குறைக்கும் வழிமுறைகள் குறித்தும் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படும்.
டெங்கு காய்ச்சல் தொடர்ந்து ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழகத்தில் 25,580 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 12 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த ஆண்டு தற்போது வரை 14,581 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 9 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் டெங்கு நோய் பரவாமல் தடுக்க புதிய வழிவகைகளை கண்டறிய முதல்முறையாக அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது. டெங்கு நோய் பாதிப்பு அதிகம் உள்ள ஒரு மாவட்டத்தில் சில வார்டுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட இருக்கிறது.
இந்த ஆய்வில், உடலில் தடவும் கொசு விரட்டி (Topical Mosquito Repellent), lemon eucalyptus oil போன்ற இயற்கை கொசு விரட்டி மற்றும் மின்சார கொசு விரட்டி (Vapourizer) ஆகியவற்றின் மூலம் டெங்கு நோய் பரப்பும் ஏடிஸ் கொசுக்கடியிலிருந்து கூடுதல் பாதுகாப்பு பெற முடியுமா மற்றும் இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுமா என்பது பற்றி கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
தனிப்பட்ட முறையில் உடலில் தடவும் கொசு விரட்டிகளால் கொசுக்கடி தடுக்கப்படுகிறது என்றாலும் சமூக அளவில் இதை பயன்படுத்துவதன் மூலம் டெங்கு நோய் பரவலை குறைக்க முடியுமா என்பது பற்றி இதுவரை கள ஆய்வுகளோ, தரவுகளோ இல்லை. இதனை கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மூன்று குழும சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ள அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக அரசு 3 முன்முயற்சிகளை மேற்கொள்ளும்.
சிறந்த கொசு விரட்டியைக் கண்டறிதல், முன்முயற்சி 2–கொசு வலை மற்றும் உடலில் தடவும் கொசு விரட்டியின் கூட்டு பயனை மதிப்பீடு செய்தல், வீட்டு மட்டத்திலான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மதிப்பீடு செய்தல்,
ஒவ்வொரு ஆய்விலும் 48 குழுமங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுமத்திலும் 20 வீடுகள் இடம்பெறும். இதன் மூலம் மூன்று ஆய்வுகளிலும் சேர்த்து சுமார் 2,880 வீடுகள் இந்த ஆய்வில் பங்கேற்கும்.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியான பயன்பாடு, பொதுமக்களின் ஏற்றுக்கொள்ளும் தன்மை , நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறு மற்றும் செலவு ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும்.
மொத்தம் சுமார் ரூ.43 லட்சம் மதிப்பீட்டுச் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஆய்வுகள் மூலம், நடைமுறைக்கு ஏற்ற, பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் செலவு குறைந்த வீட்டு மட்ட கொசு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவியல் ஆதாரங்கள் உருவாக்கப்படும். டெங்குவைத் தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வோம் கொசு பெருக்கத்தை தடுப்போம் டெங்குவை ஒழிப்போம்” என்றார்.