தமிழகம்

ஈஷா குழுவில் 80 பேர் எங்கே? - எல்லையில் கண்ணீருடன் சத்குரு

செய்திப்பிரிவு

கோவை: கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு நேற்று திபெத்தில் இருந்து கண்ணீர் மல்கவெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: திபெத் - நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், நேபாள பகுதியில் மட்டும் 484 பேர் மாயமாகி உள்ளனர். அந்த ஈஷா யாத்திரிகர்கள் குழுவில் மொத்தம் 80 பேர் உள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது எனத் தெரியவில்லை. அதில், அமெரிக்கா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த 80 பேரில் 34 ஆண்களும், 46 பெண்களும் உள்ளனர்.

இவர்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குள், இக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு, இந்தியாவிலும், நேபாளத்திலும் தகவல் தெரிவித்துள்ளோம். காலை 9.05 மணிக்குக் குடியேற்ற சோதனை மையத்தை அடைந்துவிட்டதாக குழுத் தலைவர் ஈஷங்கா பிரவீனிடம் இருந்து எங்களுக்குச் செய்தி வந்தது. அதன் பின்னர் 9.14 மணிக்கு இந்தப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் முழு நேரமாக இணைந்து பணியாற்றி வரும் பிரவீன்தான் இந்தக் குழுவை வழி நடத்தினார். அவர் எல்லையைத் தாண்டியிருந்தால், அவரது நேபாள தொலைபேசி இணைப்பு செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அந்த நேரத்தில் முழுக் குழுவினரும் அந்தக் கட்டிடத்திலேயே இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

இது மிகவும் கொடூரமானதும், இதுவரை நாம் எதிர்கொண்டிராத அளவிலான ஒரு அசாதாரண நிகழ்வுமாகும். இந்திய தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மூலமாக அனுமதி பெற முயற்சி செய்து வருகிறோம். அமெரிக்க தூதரகமும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எனக்கும், எங்களுடன் சிலருக்கும் அங்கு சென்று நிலைமையை நேரில் பார்த்து, எங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்பதை அறிந்து செயல்பட அனுமதி கிடைக்குமா என்று முயற்சிக்கிறோம். இவ்வாறு சத்குரு பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT