ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி வரும் 23-ம் தேதி மாலை இந்துக்கள் வீட்டில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் மகாதீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் வரும் 23-ம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகம் முழுவதும் கந்த சஷ்டி பாராயணம் செய்ய உள்ளனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து வில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24-வது பீடம் சடகோப ராமானுஜ ஜீயர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 23-ம் தேதி கார்த்திகை நட்சத்திரமும், சஷ்டி திதியும் ஒரே நாளில் வருகிறது.
திருப்பரங்குன்றம் மலையில் மகா தீபம் ஏற்றவும், இந்து மக்களின் ஒற்றுமைக்காகவும் அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுகள் மற்றும் கோயில்களில் அனைத்து இந்து மக்களும் தீபம் ஏற்றி, கந்த சஷ்டி பாராயணம் செய்து வழிபட வேண்டும்.
“கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” என ஆண்டாள் (திருப்பாவை) பாடியதுபோல நாம் அனைவரும் சேர்ந்து கந்த சஷ்டி பாராயணம் செய்தால், இந்து மக்களிடையே ஒற்றுமை மேலோங்கும், அனைவரும் கந்த சஷ்டி பாராயணம் செய்து அருள்பெற கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு வீடியோவில் தெரிவித்துள்ளார்.