சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலட்.
காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில், எந்தத் தவறும் இல்லை. தமிழக மக்களுக்கு நல்லதுநடக்க வேண்டும் என்பதற்காக தான், அவ்வாறு அதிகாரப் பகிர்வை கேட்கின்றனர் என கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அகில இந்திய பொதுச் செயலாளருமான சச்சின் பைலட், நேற்று ஜெய்பூரில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் ராஜஸ்தான் இளைஞர் அமைப்பு நடத்தும் விழா ஒன்றில் பங்கேற்க வந்துள்ளேன். தமிழகத்தில் காங்கிரஸ் பலமாக உள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, தமிழகத்தில் எப்போதுமே ஆதரவு கிடையாது. எனவே அக்கூட்டணி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.
தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்ப்பதில் எங்கள் இண்டியா கூட்டணி, எப்போதும் உறுதியாக இருக்கிறது. அதிகாரத்தில் பங்கு என்பது பல கட்சிகளும் கேட்பதுபோல காங்கிரஸ் நிர்வாகிகளும் கேட்கின்றனர். காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதில், எந்தத் தவறும் இல்லை. தமிழக
மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக தான், அவ்வாறு அதிகாரப் பகிர்வை கேட்கின்றனர். அதே நேரத்தில் என்ன நடந்தாலும் சரி, வருங்காலத்தில் பாஜக கூட்டணி, ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.
அரசின் செயல்பாட்டை தமிழக மக்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டுகிறார்கள். ஆனால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, நியாயமாக நடக்கவில்லை. பாரபட்சமாக செயல்படுகிறது. மாநில அரசுகளை சமமாக நடத்தாமல், பாரபட்சமாக நடத்துகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம், பாஜக கொண்டு வந்த எஸ்ஐஆர், பொதுமக்களை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி, ராஜஸ்தான் மாநிலம் உட்பட பல மாநிலங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் எவ்வாறு செயல்பட்டாலும், தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டும் என்பதில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணித் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.