

கோப்புப் படம்
அதிமுக கூட்டணிக்கு மேலும் 4 கட்சிகள் வர உள்ளன என்று பாமக முன்னாள் எம்எல்ஏவும் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்தி தெரிவித்தார்.
சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் அன்புமணி ஆதரவாளர்களான பாமக முன்னாள் எம்எல்ஏவும், மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்தி தலைமையில், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.கார்த்தி கூறியதாவது: வரும் சட்டப்பேரவை தேர்தல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக இருக்கும். இந்த மாத இறுதிக்குள் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என முடிவு செய்து அறிவிப்பார்கள். நல்ல முடிவை அறிவிப்பார்கள் என எண்ணுகிறோம். வரும் 23-ம் தேதி மதுராந்தகத்தில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட கூட்டம் நடக்கிறது.
அந்தக் கூட்டத்தில் கூட்டணியிம் இடம் பெறும் கட்சிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. எங்களது கூட்டணியில் மேலும் நான்கு கட்சிகள் வர உள்ளன. அவை எந்தக் கட்சிகள் என்று இப்போது சொல்ல முடியாது. விரைவில் அது தெரியவரும். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் பொதுவான நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.