சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வென்றது. தவெக 108 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மையை நிரூபிக்கும்போது, பழனிசாமியின் உத்தரவை மீறி, அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அவர்களின் பதவிகளை பழனிசாமி பறித்தார். அதன்பிறகு. அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், பதவி பறிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பல்வேறு பொறுப்புகளை பழனிசாமி வழங்கியுள்ளார்.
அதன்படி, தலைமை நிலையச் செயலாளராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வரகூர் அ.அருணாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், எஸ்.பி.சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ண ரெட்டி, மாஃபா பாண்டியராஜன், திருத்தணி கோ.அரி எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவராக ஏடிசி. பொன் தனபாலன், செயலாளராக பெல் இரா.தமிழரசன், மருத்துவ அணி செயலாளராக வி.சரோஜா நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், எம்எல்ஏக்கள் அருண்மொழித்தேவன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்டோருக்கு கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட பி.சந்தானகிருஷ்ணன், வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டச் செயலாளராகவும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக என்.வெங்கடாசலம், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பி.ஜெயபெருமாள், தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக எம்.சுசீகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ள நிலையில், அம்மாவட்டத்தில் பெரும்பாலான கட்சி பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.