சென்னை எழும்பூரில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்எஸ்எஸ் கொடிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார். | படம்: எல்.சீனிவாசன் |
சென்னை: விஜயதசமியை முன்னிட்டு, சென்னையில் 7 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் சீருடையில் கட்டுப்பாடுடன் பங்கேற்றனர். விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 128 இடங்களில் அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காவல்துறையிடம் அனுமதி கோரினர். காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் பேரணி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் ரமடா ஹோட்டல் அருகே பேரணி தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றோர்.
இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கொடிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார். பின்னர், மேளதாளங்கள் முழங்க பேரணி தொடங்கியது. அப்போது மழை பெய்தபோதிலும் தொண்டர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர்.
பேரணி, எல்.ஜி. சாலை, கூவம் ஆற்றுச் சாலை வழியாகச் சென்று ராஜரத்தினம் மைதானம் அருகே நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ராமகிருஷ்ண மடத்தின் ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்த மஹராஜ், ஆர்எஸ்எஸ் தென்பாரத செயற்குழுஉறுப்பினர் ஆனந்த் ரகுநாதன், மாவட்டத் தலைவர் சுரேஷ் ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பெரம்பூர் பெரவள்ளூர் சந்திப்பு அருகே தொடங்கிய பேரணியை, ஆர்எஸ்எஸ் தென்பாரத சேவைப் பொறுப்பாளர் பூ.மு.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் சிறப்புரையாற்றினார்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நடைபெற்ற பேரணியை, ஆர்எஸ்எஸ் தென்பாரத தர்ம விழிப்புணர்வு அமைப்பாளர் ராம ராஜசேகர் தொடங்கி வைத்தார்.
பின்னர், பெரியார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார். ஐயப்பன்தாங்கல் பேருந்து பணிமனை அருகே நடைபெற்ற பேரணியில், ஆர்எஸ்எஸ் வடதமிழகப் பிரச்சாரப் பிரிவு மாநில இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், கொரட்டூர், குரோம்பேட்டை, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பேரணிகள் நடைபெற்றன. அந்தவகையில் சென்னையில் 7 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று பேரணி நடைபெற்றது.
பேரணிகள் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தமிழகத்தில் மீதமுள்ள 28 இடங்களில் வரும் நவ.1-ம் தேதி அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளதாக ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.