சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள், கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், தமிழக முதல்வர் விஜய் திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், “இன்றைய முதல்வர் இந்த ஆட்சி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல எதுவுமில்லாத காரணத்தால் அவர் பிறப்பதற்கு முன்பு சொல்லபட்ட குற்றச்சாட்டை எடுத்து வந்து இப்போது பேசி உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த 116 நாள் ஆட்சியில் நடைபெற்றுள்ள கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், கொள்ளைகள், சட்டம் ஒழுங்கு சீரழிவு பற்றி ஆதாரங்களோடு நேருக்கு நேராக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பினார்.
மற்ற எதிர்க்கட்சி தலைவர்களும் அடுக்கடுக்காடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவை எதற்கும் பதில் அளிக்க யோக்கியதை இல்லாமல், தைரியமில்லாமல், செத்த பாம்பை அடிப்பது போல முடிந்து போன சர்க்காரியா கமிஷன் பற்றி பேசி உள்ளார்.
சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு தெரியுமா? சர்க்காரியா கமிஷன் தொடர்பான உண்மைகளை தற்போதைய சூழ்நிலையில் மக்களுடன் பகிர்வது என்னைப்போன்றவர்களின் கடமையாகும்.
அவர் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதற்கும் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லை. அதற்கு சில உதாரணங்களைத் தருகிறேன்.
உதாரணமாக, அண்ணா சாலையில் அண்ணா தியேட்டர் இருக்கிறது. இந்த அண்ணா தியேட்டர் கருணாநிதிக்கு சொந்தமானது என்று கூறி சர்க்காரியா கமிஷனிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டது. இது உண்மையில் யாருக்குச் சொந்தமானது என்பதற்கான தகவல்கள் விஜய்யின் கைகளில் உள்ளன. சர்க்காரியா கமிஷனைப் பற்றிப் பேசும் விஜய்க்கு தெம்பும் திராணியும் இருந்தால், அண்ணா தியேட்டர் உண்மையில் யாருக்குச் சொந்தமானது என்பதை அவர் கூறட்டும்.
இது ஜக்கரியா சேட் என்பவருக்குச் சொந்தமானது. ஆனால் அது கருணாநிதிக்கு சொந்தமானது என்று அந்தப் புகாரில் எழுதப்பட்டிருந்தது. இது முதலாவது. இரண்டாவது, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் இன்று அந்த ஹோட்டல் இல்லை. அப்பொது ஓசியானிக் ஹோட்டல் போன்ற இரண்டோ அல்லது மூன்றோ மட்டுமே இருந்தன. சாந்தோம் கடற்கரையில், கடற்கரை ஓரத்தில் ஓசியானிக் ஹோட்டல் என்று ஒரு ஹோட்டல் இருந்தது.
இது திரைப்பட நடிகர்களும் மற்ற வசதி படைத்தவர்களும் தங்கியிருந்த ஒரு ஹோட்டலாகும். அதேபோல், பூவிருந்தவல்லி சாலையை எடுத்துக் கொண்டால், அருண் ஹோட்டல் என்று ஒரு ஹோட்டல் இருந்தது. எல்லாவற்றையும் கிழித்தெறிந்து கீழே தள்ளுவேன் என்று சர்க்காரியா கமிஷனிடம் புகார் அளிக்கும் விஜய், அருண் ஹோட்டல் கருணாநிதிக்கு சொந்தமானது என்று எழுதினார்.
ஆனால் அந்த அருண் ஹோட்டல் யாருக்குச் சொந்தமானது? விஜய்க்கு இன்று தெம்பு, திராணி, தைரியம் இருந்தால், அவர் இந்த சொத்து யாருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்த வேண்டும்.
அதைவிட மிகவும் நகைப்புக்குரிய விஷயம். திருவாரூரில் கருணாநிதி 10 அல்லது 15 ஏக்கர் நிலம் தான் அப்போது வைத்திருந்தார் அந்த நிலம் இப்போது அவரது குடும்ப உறுப்பினர்களால் ஒரு நினைவிடமாகப் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு லண்டனிலிருந்து ஒரு டிராக்டர் அவருக்கு லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும், அதை அவர் திருவாரூரில் உள்ள தனது சொந்த நிலத்தை உழவு செய்யப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பிடப்பட்ட அந்த டிராக்டரைப் பயன்படுத்துவதற்கு குறைந்தது 50 ஏக்கர் நிலமாவது இருந்திருக்க வேண்டும். ஆனால் கருணாநிதியிடம் இருந்தது வெறும் பதினைந்து ஏக்கர்தான். நாங்கள் அதை அப்போதே அம்பலப்படுத்தினோம்.
இப்போது நான் பேசுவதைப் போல, சர்க்காரியா கமிஷன் எத்தகைய சூழ்நிலையில் நடைபெற்றது என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் - அவசர நிலை பிரகடனத்தின் போதுதான் அது நடந்தது. ஆனால், இன்றிருக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அன்றைக்கு இல்லை. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டபோது பேச்சுரிமை இல்லை.
பத்திரிகை சுதந்திரமும் இல்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்க முடியாது. எந்தவொரு செய்தியும் பத்திரிகைகளில் வராது. மறுப்புகளும் வெளியிடப்படாது. அந்தக் காலக்கட்டத்தில் இந்த ஆணையத்தை அமைத்த இந்திரா காந்தி கூட, 1980-இல் கடற்கரைக்கு வந்து, அவசர நிலையின் போது தனக்கு தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டதாகக் கூறி கருணாநிதிக்கு முன்னால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இது பத்திரிகை உலகத்திற்கும், அரசியலை அறிந்தவர்களுக்கும், மூத்த அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த ஒன்றாகும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களுக்கு, அரசியல் விவரமற்றவர்களுக்கு இது தெரியாது.
முதல்வர் விஜய்யிடம் நான் ஒரே ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அவருக்கு உண்மையில் தெம்பும் திராணியும் இருந்தால், அவர் வார்த்தைகளில் ஏதேனும் உண்மை இருந்தால், எங்களுடன் சர்க்காரியா கமிஷன் குறித்து விவாதிக்கத் தயாரா? வார்த்தைக்கு வார்த்தை விவாதிக்க நாங்கள் விவாதிக்க தயார், அவர் தயாரா? உதாரணமாக, புகார் கொடுத்த எம். ஜி.ஆர் தான் அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். ஆனால் எந்த வழக்கும் போட முடியவில்லை .
1977-இல், அவசர நிலையின் போது இந்திரா காந்தி திமுக, ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிடக் கழகத்தைச் சேர்ந்த பலரைச் சிறையில் அடைத்திருந்ததால், அக்டோபர் 30 அன்று அவர் சென்னைக்கு வந்தபோது கருப்புக்கொடி காட்டக் கருணாநிதி முடிவு செய்தார்; நாங்கள் கைது செய்யப்பட்டோம், மர்மலாங் பாலத்தின் அருகே ஆசிரியர் கி.வீரமணி மற்றும் அன்னை மணியம்மையார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதியுடன் நாங்களும் கைது செய்யப்பட்டு 45 நாட்கள் சிறையில் இருந்தோம்.
இந்த விவரங்களையெல்லாம், முதல்வர் விஜய் தனக்கு எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கருணாநிதி அல்லது திமுக ஏதேனும் தவறு செய்திருந்தால் எம்.ஜி.ஆரின் 10 ஆண்டு கால ஆட்சியில் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்திருக்கலாம்; ஆனால், எம்.ஜி.ஆர். அரசு அத்தகைய எந்த வழக்கையும் தொடரவில்லையே ஏன்?
நாங்கள் அக்டோபர் 1977இல் இந்திரா காந்திக்குக் கருப்புக்கொடி காட்டினோம். அதனால் அந்த வழக்கு பதியப்பட்டு கருணாநிதியுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டோம். இந்த வழக்குடன் அது முடிவடைந்தது. 1981 இல் தீர்ப்பு வந்தது, நாங்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டோம்.
நான் எம்.ஜி.ஆரின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறேன்; இந்த வழக்கில் எப்படியாவது எங்களை உள்ளே வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்றத்தில் நாங்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். ஆக, 1977 இல் நாங்கள் காட்டிய கருப்புக்கொடி தொடர்பான வழக்கு பிப்ரவரி 1996 இல்தான் வழக்கு முடிந்தது. இந்த ஒரு உதாரணம் போதாதா? முழு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒருவருக்கு புத்தி கூர்மையும் அரசியல் தெளிவும் இருந்தால் அல்லது ஸ்கிரிப்ட் எழுதியவருக்காவது கடந்த கால வரலாறு பற்றி கொஞ்சமாவது அறிவு இருக்க வேண்டும். இந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்க வேண்டும். முதல்வர் விஜய் தனது ரசிகர்களுக்காக பேசி உள்ளார், அவ்வளவே. தமிழ்நாட்டின் தரம், மாண்பு, பாரம்பரியம் மற்றும் சட்டமன்ற மரபுகள் அனைத்தும் இன்று மாண்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீறப்பட்டுள்ளது.
சாதாரண ஒரு கருப்புக் கொடிப் போராட்ட வழக்கிற்காகவே அன்றைய அரசாங்கம் உச்ச நீதிமன்றம் வரை சென்றபோது, கருணாநிதி அல்லது மற்றவர்கள் உண்மையில் ஏதாவது தவறு செய்திருந்தால் அவர்கள் விட்டிருப்பார்களா? அவருக்கு இந்த அடிப்படை சைக்காலஜிகூட இல்லையா? இதை தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமலேயே விஜய் பேசுகிறார்.
இன்னொரு விஷயத்தைக் கேட்கிறேன். இந்த அனைத்துப் புகார்களும் அளிக்கப்பட்டபோது அவர் பிறக்கவே இல்லை. இது 1972 இல் அளிக்கப்பட்ட ஒரு புகார். அதன் பிறகுதானே உங்கள் தந்தை, கருணாநிதியால் எழுதப்பட்ட வசனத்தின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை இயக்கச் சென்றார்? இல்லை, இல்லை, ஊழல்வாதி எழுதிய நாடகத்தைத் தொடமாட்டேன் என்று கூறி உங்கள் தந்தை மறுக்கவில்லை? போய் உங்கள் தந்தையிடம் கேளுங்கள். இன்று அவரது ஆட்சியில் நடக்கும் ஊழல் மட்டுமல்ல; இன்று காலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவருடைய காரால் இடிக்கபட்டு ஒருவர் கொல்லப்பட்டார்.
நேற்றுதான் ஆளும் தவெக கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்டமன்றத்தில் இதையெல்லாம் பேச வேண்டிய நேரம் இது. காரணம், மூன்று நாட்களுக்குப் பிறகு சட்டமன்றம் கூடுகிறது. இதைக் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்—ஒரு கொலை நடந்துள்ளது, உங்கள் சொந்தக் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் பயங்கரமான கொலை செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, உங்கள் அமைச்சருக்குச் சொந்தமான கார் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் இறந்துள்ளார். இன்றைய சட்டமன்றத்தில் எழுப்பப்பட வேண்டிய பிரச்சினைகள் இவைதான். ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்கள் இப்பிரச்சினைகளை திசைதிருப்பும் வேலையைச் செய்கிறார்; இதுவொரு "திசைதிருப்பல்" தந்திரமாகும், இதனால், மக்கள் பேசப்போவதெல்லாம் விஜய்யின் சட்டமன்றப் பேச்சை பற்றி மட்டும்தான். தொலைக்காட்சியில், சமூகவலைதளங்களில் பார்ப்பவர்களுக்கு தவெக உறுப்பினர் கொலை மற்றும் அமைச்சரின் காரால் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றிய பெரிய செய்திகள் எதுவும் வெளிவராது.
1989 சட்டமன்ற நிகழ்வு குறித்தும் - ஜெயலலிதா குறித்தும் விஜய் பேசுகிறார். அதைப் பற்றிப் பேசு அவருக்கு எந்த யோக்கியதையும் இல்லை. ஏனெனில், அந்நிகழ்வு நடக்கும்போது ஜெயலலிதா உடனிருந்த திருநாவுக்கரசு அன்று சட்டமன்றத்தில் என்ன நடந்தது என்பதைப் பலமுறை பத்திரிகைகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆக திசை திருப்புகிற அரசியல் செய்கிறார் விஜய்.
ஆணித்தரமாக எதிர்க்கட்சித் த்லைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதற்கு தெம்பில்லாமல் - திராணி இல்லாமல் இன்றைக்கு ஒரு கபட நாடகத்தையும், திசைதிருப்பும் முயற்சியையும் சட்டசபையிலே அரங்கேற்றிவிட்டு ஓடியிருக்கிறார் தமிழக முதல்வர் விஜய்.
இறுதியாக, முதல்வர் விஜய்க்கு சொல்லிக் கொள்வது, இவரை விட ஜாம்பவான் எல்லாம் 75 ஆண்டுகளாக பார்த்து வளர்ந்த கட்சி இந்த திமுக. நேருவையே நாங்கள் பார்த்தவர்கள். பண்டிதர் நேரு திமுகவை ஒழிப்பதற்காகவே சட்டத்தையே திருத்தினார் தெரியுமா? விஜய்க்கு இந்த வரலாறு தெரியுமா?
அண்ணா திராவிட நாடு கேட்டபோது , திமுகவை தடை செய்யணும் என்பதற்கே நேஷனல் இன்டகிரேஷன் கமிட்டி என்ற ஒரு கமிட்டியை ஒன்றை சிபி ராமசாமி ஐயர் தலைமையில போட்டு திமுகவை தடை செய்ய முயற்சி செய்தனர். அதற்குப் பிறகுதான் இந்த கட்சி வளர்ந்து ஆறு முறை ஆட்சியை பிடித்தது. பல பிரதமர்களை உருவாக்கிய பல ஜனாதிபதிகள் உருவாக்கிய கட்சி இது. யாரோ ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்தனர் என அதை வைத்து பேசுறார் விஜய்” என்று அவர் தெரிவித்துள்ளார்.